லக்னோ:உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டம் முரத் நகரில் உள்ள தகனம் செய்யும் இடத்திலுள்ள ஒதுங்குமிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில், 17 பேர் உயிரிழந்தனர். தற்போதுவரை 20 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அப்பகுதியைச் சேர்ந்த ராம் தன் என்பவரின் உடலை தகனம் செய்வதற்காக அவர்களது உறவினர்கள் முரத்நகர் தகன மையத்திற்கு வந்துள்ளனர்.
இதுதொடர்பாக தகவல் தெரிவித்த காவலர் பிரவீன் குமார், "இறுதி சடங்கு நடைபெற்றுக்கொண்டிருக்கையில், கடும் மழை பெய்த காரணத்தால் அங்கிருந்த ஒதுங்குமிடத்தில் சிலர் தஞ்சமடைந்துள்ளனர். அந்நேரமாக மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது" என்றார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், பேரிடர் மீட்புக் குழுவினர், இடிபாடுகளில் சிக்கிய மேலும் சிலரை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், முரத்நகர் விபத்தில் உயிரிழந்தோருக்கு அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், "விபத்து நடைபெற்ற பகுதியில், மீட்புப் பணிகளை முழு வீச்சில் தொடர மாவட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விபத்தில் சிக்கியோருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்துகொடுக்கும்" என்றார்.
இதையும் படிங்க:காரில் இருந்து இறங்கிய போது, மயங்கி விழுந்த சதானந்த கவுடா