டெல்லி:இந்திய அரசின் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி அமைச்சகம் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சகம் ஆகியவற்றுக்கு இடையே இந்தியாவில் கடல் விமான சேவைகளை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று(ஜூன்.15) கையெழுத்தானது.
துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) மன்சுக் மாண்டவியா மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் புரி ஆகியோரின் முன்னிலையில், இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதன் மூலம் கடல் விமான சேவை வெகு விரைவில் சாத்தியமாகும். இந்திய அரசின் ஆர்சிஎஸ்-உடான் திட்டத்தின் கிழ், இந்திய எல்லைக்குள் கடல் விமான சேவைகள் தொடங்கப்படவுள்ளன.
பல்வேறு இடங்களில் இச்சேவைகளை குறித்த நேரத்தில் தொடங்குவதற்காக துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி அமைச்சகம், விமான போக்குவரத்து அமைச்சகம் மற்றும் சுற்றுலா அமைச்சகத்தின் அலுவலர்களைக் கொண்ட ஒத்துழைப்பு குழு ஒன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் அமைக்கப்படும்.
அனைத்து முகமைகளாலும் அடையாளம் காணப்பட்ட வழித்தடங்களில் கடல் விமான சேவைகளை வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும்.
இந்த நிகழ்ச்சியில் விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கூறுகையில்,"இரு அமைச்சகங்களுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் புதிய நீர் விமான நிலையங்கள் உருவாகும். இந்தியாவில் புதிய கடல் விமான வழித்தடங்கள் ஏற்படும்" என்றார்.
அதைத்தொடர்ந்து துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) மன்சுக் மாண்டவியா கூறுகையில், "இந்திய கடல்சார் மற்றும் விமான போக்குவரத்து துறைகளுக்கு திருப்புமுனையாக இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் அமையும் என்றும், கடன் விமானங்கள் மூலம் சுற்றுச்சுழலுக்கு உகந்த போக்குவரத்தை இது ஊக்கப்படுத்துவதால், நாடு முழுவதும் தடையில்லா போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதோடு, சுற்றுலா துறையின் வளர்ச்சிக்கும் இது வழிவகுக்கும்" என்றார்.