உலகம் முழுவதும் உள்ள கேரள மக்கள் இன்று (ஆக.21) ஓணம் பண்டிகையை வெகு விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி சசி தரூர், இன்று தனது குடும்பத்துடன் கேரளாவின் பாலக்காட்டில் உள்ள தனது மூதாதையர் வீட்டில் ஓணம் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்.
பாரம்பரிய ஊஞ்சல் ஆடி ஓணம் கொண்டாட்டம்
மேலும் தன் வீட்டின் முற்றத்தில் உள்ள பாரம்பரிய ஊஞ்சல் ஒன்றில் அமர்ந்து மகிழ்ச்சியுடன் ஆடியபடி காணொலி ஒன்றையும் சசி தரூர் பகிர்ந்துள்ளார். முன்னதாக ஆகஸ்ட் 18ஆம் தேதி, மறைந்த தனது மனைவி சுனந்தா புஷ்கர் கொலை வழக்கிலிருந்து சசி தரூர் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், இன்று அவர் பகிர்ந்துள்ள பதிவில், "பாரம்பரிய ஓணம் ஊஞ்சல் பொதுவாக இளம்பெண்களுக்கானது. ஆனால் இந்த ஆண்டு நானும் இவற்றை செய்வதற்காக வற்புறுத்தப்பட்டுள்ளேன். அனைவருக்கும் ஓணம் வாழ்த்துகள்" எனப் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக ஓணம் குறித்து மற்றொரு பதிவையும் பகிர்ந்திருந்த சசி தரூர், அதில் ஓணம் குறித்தும், தனது குழந்தைப் பருவம், பாலக்காட்டின் எலவாஞ்சேரி கிராமத்தில் உள்ள தன் மூதாதையர் வீடு, ஆகஸ்ட் 2010ஆம் ஆண்டு சுனந்தா புஷ்கரை திருமணம் செய்த இடம் ஆகியவற்றைப் பற்றியும் நினைவுகூர்ந்திருந்தார்.
ஓணம் வாழ்த்து தெரிவித்த தலைவர்கள்
இந்தியா முழுவதும் உள்ள கேரள மக்களுக்கு ட்விட்டர் மூலம் ஓணம் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, ஓணம் நேர்மறை எண்ணங்கள், உற்சாகம், சகோதரத்துவம், நல்லிணக்கம் ஆகியவற்றுடன் தொடர்புடைய திருவிழா எனப் புகழ்ந்திருந்தார்.