கோழிக்கோடு: கேரள மாநிலத்தைச் சேர்ந்த எழுத்தாளரும் மாற்றுத்திறனாளியுமான சிவிக் சந்திரன் (74) தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் எழுத்தாளர் ஒருவர் கடந்த 2020ஆம் ஆண்டு, போலீசில் புகார் அளித்தார். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சிவிக் சந்திரன் கோழிக்கோடு மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதோடு, அந்த பெண் எழுத்தாளருடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் சமர்ப்பித்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் எழுத்தாளர் சிவிக் சந்திரனுக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இந்த உத்தரவு நகல் இன்று வெளியாகியுள்ளது.
அதில், மனுதாரர் தாக்கல் செய்த புகைப்படங்களை வைத்துப் பார்க்கும்போது, புகார் அளித்த பெண் பாலியல் உணர்வை தூண்டும் வகையில் ஆடை அணிந்திருப்பதாகவும், 74 வயதான மாற்றுத்திறனாளி நபர் பெண்ணை வலுக்கட்டாயமாக தனது மடியில் அமர வைத்து பாலியல் தொல்லை கொடுத்திருப்பதாக கூறுவதை நம்பமுடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனால், சட்டப்பிரிவு 354ஏ குற்றம் சாட்டப்பட்டவருக்கு பொருந்தாது என கருதி, அவருக்கு முன்ஜாமீன் வழங்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. நீதிபதி எஸ்.கிருஷ்ணகுமார் வழங்கிய இந்த சர்ச்சைக்குரிய தீர்ப்புக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:சென்னையில் கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட போட்டியினால் ஆட்டோ டிரைவர் கொலை... போலீசார் விசாரணை