டெல்லி:பாஜக முன்னாள் செய்தி தொடர்பாளர் நூபுர் சர்மா நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்தால் அவருக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பல்வேறு மாநிலங்களிலும் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் அனைத்தையும் டெல்லிக்கு மாற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று நூபுர் சர்மா உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூரியகாந்த், ஜே.பி.பார்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த அமர்வு நூபுர் சர்மாவின் பேச்சு குறித்து விமர்சித்தனர். மேலும், அவரது பொறுப்பற்ற பேச்சால் நாட்டையே தீக்கிரையாக்கிவிட்டார். தொலைக்காட்சி முன் தோன்றி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.
இந்தநிலையில் நீதிபதி ஜே.பி.பார்திவாலா, "நீதிபதிகள் மீதான தனிப்பட்ட தாக்குதல்கள் நாட்டில் ஆபத்தான சூழ்நிலைக்கு வழிவகுக்கும் என்று கூறியுள்ளார். கருத்தரங்கு ஒன்றில் இன்று (ஜூலை 3) பேசிய அவர் கூறுகையில், டிஜிட்டல் மற்றும் சமூக ஊடகங்களை முறைப்படுத்துவதற்கு ஏதுவான சட்டம் மற்றும் விதிகளை வகுப்பது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும். குறிப்பாக முக்கிய விசாரணைகளுக்கு என விதிகள் அறிமுகப்படுத்த வேண்டும்.