டெல்லி: டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் சத்யேந்தர் ஜெயின். இவர் சட்டவிரோதமாகப் பணப் பரிவர்த்தனை செய்ததாகப் புகார்கள் எழுந்தது. இந்நிலையில், இது குறித்து வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 2017ஆம் ஆண்டு சத்யேந்தர் ஜெயின் மீது உழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
இது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தவும், அந்த கட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சத்யேந்திர ஜெயினை பழி வாங்கும் நோக்கத்தில் மத்திய பாஜக அரசு இதுபோன்ற பழிகளைச் சுமத்தி அலைக்கழிப்பதாக்கவும் ஆம்ஆத்மி கட்சியினர் குற்றம் சாட்டிவந்தனர்.
அதே நேரம், சத்யேந்தர் ஜெயின் மீதான வழக்கும் அதன் விசாரணைகளும் நாளுக்கு நாள் சூடு பிடித்தது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பான விசாரணை சிபிஐ வசம் இருந்து அமலாக்கத்துறையிடம் கைமாறியது.தொடர்ந்து பல்வேறு கட்ட விசாரணைகளை மேற்கொண்ட அமலாக்கத்துறை கடந்த ஆண்டு சத்யேந்தர் ஜெயினை அதிரடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திகார் சிறையில் அடைத்தது. இதனைத் தொடர்ந்து தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனக்கூறி சத்யேந்தர் ஜெயின் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில் சிறைக்குச் சென்ற பிறகு சத்யேந்திர் ஜெயின் உடல் ரீதியாக பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகியிருப்பதாகவும், சுமார் 15 கிலோ எடை குறைந்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பண மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியாக உள்ள சத்யேந்தர் ஜெயினுக்கு ஜமீன் வழங்க முடியாது எனவும் அவரை வெளியே அனுமதித்தால் சாட்சியங்கள் அழிக்கப்படும் எனவும் குறிப்பிட்டு ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தது. இதனைத் தொடர்ந்து, சிறையிலிருந்து வந்த சத்யேந்தர் ஜெயின், அங்குள்ள கழிவறையில் தலை சுற்றி வழுக்கி கீழே விழுந்துள்ளார்.
இதனால் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஐசியு பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக விசாரித்து சத்யேந்தர் ஜெயினுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என சத்யேந்தர் ஜெயின் தரப்பு மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளனர். இந்த மனுவை அவசர வழக்காக ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, சத்யேந்தர் ஜெயினின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு இன்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த ஜாமீன் நிபந்தனை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதை சத்யேந்தர் ஜெயின் தரப்பு முறையாகப் பின்பற்ற வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 75 Rupees Coin: புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பையொட்டி 75 ரூபாய் நாணயம் அறிமுகம்!