ரியோ டி ஜெனிரோ: பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் சர்வதேச துப்பாக்கி சுடுதல் கூட்டமைப்பின் (ISSF) உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடைபெற்றது. இதில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைஃபிள் போட்டியில் இந்திய துப்பாக்கிச் சூடு வீராங்கனை தமிழ்நாட்டை சேர்ந்த இளவேனில் வாலறிவன் தங்கப் பதக்கம் வென்றார்.
இறுதிப் போட்டியில் 252.2 புள்ளிகள் குவித்து இளவேனில் வாலறிவன் தங்கப் பதக்கம் வென்றார். நடப்பு உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் தங்க பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து பிரான்சின் ஓசியான் முல்லர் 251.9 புள்ளிகளுடன் 2ஆவது இடத்தையும், சீனாவின் ஜியாலே ஜாங் 229 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தையும் பிடித்தனர்.
இந்திய விளையாட்டு ஆணையம் (SAI) இளவேனில் வெற்றி பெற்ற செய்தியை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து பாராட்டி இருந்தது. இந்நிலையில் தமிழக துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவனுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டு உள்ளது.
அந்த அறிக்கையில், "ரியோ டி ஜெனீரோவில் நடந்த ஐ.எஸ்.எஸ்.எப் உலக கோப்பை 2023 மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைஃபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனை இளவேனில் வாலறிவனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களின் சிறப்பான செயல்பாட்டால் ஒட்டுமொத்த தேசமும் பெருமிதம் கொள்கிறது" என்று அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.