புதுச்சேரி:புதுச்சேரி மாநிலம் மூலக்குளம் டீச்சர்ஸ் காலனி ரோஜா நகரில் வசித்துவருகின்றார் அரசுக் கல்வித் துறை அலுவலர் ரமணி. இவரது மனைவி சித்ரா காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்துவருகிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இவர்களது வீட்டில் வெளிநாட்டு வகை நாய்களான ராட் வீலர் வகையைச் சேர்ந்த இரண்டு நாய்களை வளர்த்துவந்தனர். அவற்றிற்கு லெனி, மிஸ்ட்டி எனப் பெயரிட்டு அழைத்தனர். இந்த நிலையில் மிஸ்ட்டி என்ற நாய்க்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் ரமணி குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து அந்த நாய்க்கு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும் நாய் சோர்வுடனே இருந்துவந்தது.
இந்த நிலையில் ரமணி தனது வீட்டின் மொட்டை மாடிக்குச் சென்று பார்த்தபோது அங்கு சுமார் 3 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு செத்துக் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அப்போது வீட்டுக்குள் நுழைய முற்பட்ட அந்தப் பாம்புடன் மிஸ்ட்டி போராடிக் கொன்று இருப்பதும் பாம்பு கடித்து விஷம் ஏறியதால் நாய்க்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட காரணமும் அப்போதுதான் அவருக்குத் தெரியவந்தது.