புதுச்சேரியில் திமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. மாநிலத்தின் முதலமைச்சராக நாராயணசாமி இருந்து வருகிறார். இந்த அரசுக்கு காங்கிரஸ் 15, திமுக 3, சுயேச்சை 1 என மொத்தம் 19 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருந்து வந்தது. எதிர்க்கட்சி வரிசையில் என்.ஆர்.காங்கிரஸ் 7, அதிமுக 4, பாரதிய ஜனதா (நியமனம்) 3 என 14 எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர்.
இந்நிலையில் கட்சித் தாவல் தடை சட்டத்தின்கீழ், பாகூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்த தனவேலுவின் பதவி பறிக்கப்பட்டது. மேலும் அமைச்சர்களாக இருந்த நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், தீப்பாய்ந்தான், ஜான்குமார் ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ பதவியை அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். இதனால், நாராயணசாமி அரசுக்கு பெரும்பான்மை இல்லை என எதிர்க்கட்சிகள் கூறிவந்தன.
இதற்கிடையில், ஆளுநர் மாளிகைக்கு எதிர்க்கட்சியினர் சென்று முதலமைச்சர் நாராயணசாமி சட்டப்பேரவையில் மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி கடிதம் கொடுத்தனர்.