கொல்கத்தா: மாதவிடாய் குறித்த விழிப்புணர்வு இன்றைய காலத்து மக்களிடையே பரவலாக ஏற்பட்டுள்ளது. தொண்டு நிறுவனங்கள், அரசு மேற்கொண்ட முயற்சியால் அனைவரும் தெரிந்து வைத்துக் கொள்ளகூடிய ஒன்றாக மாறியிருக்கிறது. பலரும் இது குறித்து பொதுவெளியில் பேசத் தொடங்கியுள்ளனர். முன்பு இருந்ததுபோல் இல்லாமல் மாதவிடாய் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே நன்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மேற்கு வங்கா ஹோட்டலில் தங்கியிருந்த பெண் வாடிக்கையாளருக்கு போர்வையில் மாதவிடாய் கறை இருந்ததாக கூறி ஹோட்டல் நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் மேற்கு மேதினிபூரில் ஹோட்டல் புக்கிங் ஆப் மூலம் பெண் ஒருவர் ஹோட்டல் அறை முன்பதிவு செய்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை இரவு (மே 8) உறவினர் வீட்டுக்குச் சென்று விட்டு அன்று இரவு மேற்கு மேதினிபூரில் முன்பதிவு செய்த ஹோட்டல் அறையில் கல்லூரி பேராசிரியையான அந்த பெண் தங்கி உள்ளார்.
திங்கள்கிழமை (மே 9) காலை ஹோட்டலில் இருந்து செக் அவுட் செய்த போது, கூடுதலாக 400 ரூபாய் பில்லில் சேர்க்கப்பட்டிருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், இதுகுறித்து ஹோட்டல் நிர்வாகத்திடம் கேட்டபோது, போர்வையில் மாதவிடாய் கறை இருந்ததாக தெரிவித்து, இதை துவைத்து பயன்படுத்த முடியாது என கூறி கூடுதல் தொகை விதித்ததாக கூறியுள்ளனர்.