சென்னை:கேரள முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி இன்று (ஜூலை 18) அதிகாலை 4.25 மணியளவில் பெங்களூரு சின்மயா மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 79. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது இறப்புக் குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் “ஸ்ரீ உம்மன் சாண்டி ஜி அவர்களின் மறைவுடன், பொது சேவைக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்து, கேரளாவின் முன்னேற்றத்திற்காக உழைத்த பணிவான மற்றும் அர்ப்பணிப்புள்ள தலைவரை நாம் இழந்துவிட்டோம். நாங்கள் இருவரும் அந்தந்த மாநிலங்களில் முதலமைச்சராகப் பதவி வகித்தபோதும், பின்னர் நான் டெல்லிக்குச் சென்றபோதும் அவருடன் நான் நடத்திய பல்வேறு தொடர்புகளை நான் குறிப்பாக நினைவில் கொள்கிறேன்.இந்த துயரமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடனும், ஆதரவாளர்களுடனும் உள்ளன. அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” என்றுக் குறிப்பிட்டு உள்ளார்.
இந்திய தேசிய காங்கிரஸின் தலைவரான ராகுல் காந்தி ட்விட்டர் பக்கத்தில், “உம்மன் சாண்டி ஒரு முன்மாதிரியான காங்கிரஸ் தலைவராக இருந்தார். வாழ்நாள் முழுவதும் கேரள மக்களுக்கு அவர் ஆற்றிய சேவைக்காக நினைவுகூரப்படுவார்.அவரது அன்புக்குரியவர்கள் அனைவருக்கும் மிகுந்த அன்பும் இரங்கலும்” எனத் தெரிவித்துள்ளார்.