டெல்லி:பட்டினி, ஊட்டச்சத்து குறைபாடுகளை நிவர்த்திசெய்ய நாடு முழுவதும் சமூக சமையலறைகளை அமைக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று (நவம்பர் 16) விசாரித்தது.
இவ்விசாரணை, தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையில் அமர்வுக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபாலிடம், தலைமை நீதிபதி கூறியதாவது, “எந்த அரசியலமைப்பும், சட்டமும், நீதிமன்றமும் பசி பட்டினியைப் போக்கவேண்டாம் என்று கூறாது. இதில் எனது ஆலோசனை என்னவென்றால், ஏற்கனவே இதில் நாம் தாமதித்துவருகிறோம்.
இதனால் இவ்வழக்கில் மேற்கொண்டு ஒத்திவைக்க வேண்டாம். இரண்டு வாரங்களுக்குள், பசிப் பட்டினியைப் போக்கும்பொருட்டு, மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து மத்திய அரசு ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும்.
விசாரணையின் தொடக்கத்தில், நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா, ஹிமா கோலி ஆகியோர், “மத்திய அரசு சமர்ப்பித்த பிரமாணப் பத்திரத்தில் இன்னும் இந்த விஷயத்தில் பரிந்துரைகளைச் சேகரிக்கும் பணியில் இருப்பதாகத் தெரிகிறது” என்று கூறினர்.
இந்த விவகாரத்தில் விரிவான வாதங்களைக் கேட்ட உச்ச நீதிமன்றம், பல்வேறு மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து, சில திட்டங்களைக் கொண்டுவர மத்திய அரசுக்கு மூன்று வார கால அவகாசம் வழங்கியது.
மேலும் மாநில அரசுகள் ஏதேனும் எதிர்ப்புத் தெரிவித்தால், அது அடுத்த விசாரணையில் எடுத்துக்கொள்ளப்படும் எனவும், ஒரு திட்டத்தைக் கொண்டுவருவதற்கு மத்திய அரசுடன் ஒத்துழைக்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் நாங்கள் அறிவுறுத்துகிறோம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு மையத்தை இணைக்கும் திட்டம் இல்லை; ஒன்றிய அரசு