கொழும்பு:இலங்கையில் நடந்த உள்நாட்டு போரின் உச்ச கட்டத்தில் தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக 2009-ஆம் ஆண்டு மே மாதம் 18-ஆம் தேதி இலங்கை ராணுவம் அறிவித்தது. ஆனால் அண்மையில், உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், பிரபாகரன் நலமுடன் இருக்கிறார் எனக் கூறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தமிழீழ விடுதலை புலிகளின் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணம் தொடர்பாக அப்போது பாதுகாப்பு அமைச்சராக இருந்த தமக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை என இலங்கை முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசென தெரிவித்து இருப்பது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கை யாழ்பாணத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "தமிழீழ விடுதலை போர் இறுதிக் கட்டத்தில் இருந்த சமயத்தில் 2 மாதங்கள் மட்டுமே தான் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்ததாகவும், பிரபாகரனுக்கு அப்போது மரபணு சோதனை நடைபெற்றது குறித்து எனக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்று கூறினார்.
தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரபணுப் பரிசோதனைக்காக ரத்த மாதிரி எடுக்கப்பட்டு, இறுதி யுத்தத்தில் மீட்கப்பட்ட உடல் அவருடையதே என உறுதி செய்யப்பட்டதாக இலங்கை ராணுவம் கூறி இருந்தது. இருப்பினும் அது தொடர்பான தகவல்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறுவதற்கு முயற்சித்த போதிலும் அதனை இலங்கை ராணுவத்தினர் மறுத்துவிட்டதாக தெரிவித்தார்.