மேற்கு வங்கத்தின் சட்டப்பேரவை தேர்தல் எட்டு கட்டங்களாக நடைபெறுகிறது. ஏற்கனவே, ஐந்து கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், இன்று (ஏப்ரல்.22) காலை 7 மணியளவில் ஆறாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் ஆர்வமாக நீண்ட வரிசைகளில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். ஐந்தாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவின் போது வன்முறை நிகழ்ந்ததைச் சுட்டிக்காட்டியும், கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பதையும் கூறி மீதமுள்ள மூன்று கட்ட தேர்தல்களையும் ஒரே கட்டமாக நடத்திட வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதுகுறித்து தேர்தல் ஆணையம், "கரோனா பெருந்தோற்றுக்கு மத்தியில் மூன்றுகட்ட தேர்தலை ஒரே கட்டமாக நடத்துவது சாத்தியமில்லை. வாக்குச்சாவடி மையங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்திட வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது" என தெரிவித்தது.