புதுச்சேரி: திமுக-காங்கிரஸ் கூட்டணி கொள்கை ரீதியில் ஒற்றுமையாக உள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் மக்கள் நலத்திட்ட கோப்புகள் தொடர்பாக துணைநிலை ஆளுநரின் அழைப்பிற்காக சட்டசபை. வளாகத்தில் கடந்த 8 நாள்களாக உள்ளிருப்பு அறவழிப் போராட்டத்தில் அமைச்சர் கந்தசாமி ஈடுபட்டு வருகிறார். அமைச்சர் கந்தசாமியின் போராட்டத்தை ஆதரித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் அழகிரி, புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் அமைச்சரை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் அழகிரி, “புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி சட்டத்திற்கு புறம்பாகவும், மக்கள் நலத்திற்கு எதிராகவும் ஒற்றையாட்சி நடத்திவருகிறார். அவருக்கு எதிராக காந்திய வழியில் அமைச்சர் கந்தசாமி போராடி வருகின்றார்.
திமுக காங்கிரஸ் கூட்டணி
ஜனநாயகத்திற்கு எதிராக ஆளுநரை வைத்து ஆட்டி படைக்கும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளார். இது புதுச்சேரிக்கு மட்டும் ஏற்பட்ட ஆபத்து இல்லை, தென்னிந்தியாவிற்கு ஏற்பட்ட ஆபத்து. ஜன நாயகத்துக்கு ஏற்பட்ட மிகப்பெரிய ஆபத்து.
புதுச்சேரியில் காங்கிரஸ், திமுக தலைமைகளிடையே உள்ள கருத்து வேறுபாடுகளை பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். இதனை முதலமைச்சர் நாராயணசாமி திறமையாக கையாள்வார். திமுக தலைவர் ஸ்டாலின் இது குறித்து பேசி முடிவு எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. தொகுதி பங்கீட்டில் கடந்த முறையை விட அதிகம் குறைவு என்பது விவாதம் இல்லை.