அமராவதி (ஆந்திரப் பிரதேசம்):ஆந்திரப்பிரதேச மாநிலம், சித்தூரில் மாவட்டம், பலமனேரில் உள்ள பிரம்மர்ஷி உயர்நிலைப் பள்ளியில் மிஸ்பா என்ற மாணவி 10ஆம் வகுப்பு படித்து வந்தார். மிஸ்பா, நன்றாகப் படிக்கும் பள்ளியில் முதலிடம் பெறும் மாணவி எனத் தெரிய வருகிறது.
மிஸ்பா இன்னும் ஒருமாதத்தில் வரவிருக்கும் பொதுத்தேர்வுக்காக தயாராகி கொண்டிருந்த நிலையில், மார்ச் 23ஆம் தேதி, திடீரென தற்கொலையால் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இது குறித்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், மிஸ்பா நன்றாகப் படித்து முதல் மதிப்பெண் எடுத்து வந்ததால், அவர் உடன் படிக்கும் மற்றொரு மாணவிக்கு பொறாமை இருந்துள்ளது. அந்த மாணவியின் தந்தை ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் நிர்வாகியாக உள்ளவர்.
அந்த மாணவியின் தந்தை தனது மகள் மட்டுமே பள்ளியில் முதலிடம் பெற வேண்டும் எனவும், வேறு யாரும் முதலிடம் பெறக்கூடாது எனக் கூறியும் பள்ளி ஆசிரியரை மிரட்டியதாகத் தெரிகிறது. இதனால் மிகுந்த அழுத்தத்திற்கு ஆளான பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர் ஒருவர், நன்றாகப் படித்து வந்த மாணவி மிஸ்பாவுக்கு மாற்றுச்சான்றிதழ் அளித்து, பள்ளியை விட்டு வெளியேறச் சொல்லியுள்ளனர். இதனால் மனமுடைந்த மாணவி தற்கொலையால் உயிரிழந்தார் எனக் காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும், உயிரிழந்த மாணவி இரண்டு பக்க கடிதம் எழுதிவைத்திருந்ததாகவும் தெரிவித்தனர்.