மும்பை: மகாராஷ்டிர மாநிலம், மும்பையைச் சேர்ந்த விவேகானந்த் குப்தா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், "மும்பை சவான் கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியில் தேசியகீதம் ஒலிக்கப்பட்டபோது, எழுந்து நிற்காமல் அமர்ந்திருந்த மம்தா, பாதியிலேயே அங்கிருந்து வெளியேறினார். தேசியகீதத்தை அவமதித்த அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் நீதிமன்றம், மம்தாவுக்கு சம்மன் அனுப்பியது. இதை எதிர்த்து மம்தா தரப்பில் செசன்ஸ் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ரோகாடே, மம்தாவுக்கு அனுப்பப்பட்ட சம்மனை தள்ளுபடி செய்தார்.
ஆனால், அதே நேரம் இந்த வழக்கை மீண்டும் புதிதாக விசாரிக்க மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்ட அவர், குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 200, 202ன் கீழ் வரும் புகார்களை விசாரிக்கும் அதிகாரம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு இல்லை என்றும் குறிப்பிட்டார்.