புதுச்சேரி:ஜிப்மர் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'புதுச்சேரியில் கடந்த மூன்று வாரங்களில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.
இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
ஜனவரி 18ஆம் தேதி முதல் தொலைபேசியில் ஆலோசனை
வெளிப்புற நோயாளிகள் சிகிச்சைப் பிரிவுக்கு ஆலோசனைக்காக வரும் கரோனா அல்லாத நோயாளிகளுக்கு கரோனா பரவும் அபாயத்தைக் குறைக்கும் வகையில், வரும் ஜனவரி 18ஆம் தேதி முதல், தொலைபேசி மருத்துவ ஆலோசனை சேவைகளை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
முன்பதிவு தேவை
மேலும், ஜிப்மர் மருத்துவரிடம் ஆலோசனை பெற விரும்பும் நோயாளிகள், www.jipmer.edu.in என்ற ஜிப்மர் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட எண்ணுக்குத் தொடர்புகொண்டு முன்பதிவு செய்ய வேண்டும்.
நேரடி வருகைக்கும் அனுமதி
வரும் 19ஆம் தேதி முதல், நாள் ஒன்றுக்கு ஒவ்வொரு துறைக்கும் 50 நோயாளிகள் நேரடி வருகைக்கு அனுமதிக்கப்பட்டு வெளிப்புற நோயாளிகள் சிகிச்சைப் பிரிவில் ஆலோசனைகள் வழங்கப்படும்.
ஒவ்வொரு துறையும் முன்பதிவின் அடிப்படையில் மட்டுமே செயல்படும். சமூகத்திலும், மருத்துவமனையிலும் கரோனா பரவும் அபாயத்தைக் குறைக்க, ஜிப்மர் வெளிப்புற நோயாளிகள் பிரிவுக்கு வரும் நோயாளிகளுக்கு முன்னெச்சரிக்கையுடன் சிகிச்சை அளிக்கப்படும்.
அறுவை சிகிச்சைப் பிரிவுகள் வழக்கம்போல் இயங்கும்
நோயாளிகளும், அவர்களது உதவியாளர்களும் முன்னரே தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லையென்றால், கரோனாவுக்கு எதிராக இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
ஏனெனில், தடுப்பூசியானது ஒமைக்ரான் வகை மாறுபாட்டுக்கு எதிராகக்கூடப் பாதுகாப்பை அளிக்கிறது.
அனைத்து அவசர மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சைப் பிரிவுகளும் வழக்கம் போல் இயங்கும்' என்று கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:10,11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவிப்பு