சோனார்பூர்:மேற்கு வங்க மாநிலம்,சோனார்பூரைச் சேர்ந்த தும்பா என்பவர்காணாமல் போனதைத் தொடர்ந்து, அவரது தந்தை அளித்தப் புகாரின் பேரில், சோனார்பூர் காவல் நிலையத்தில் கடந்த மார்ச் 2020ல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கு 3 வருடத்திற்குப் பின், புலனாய்வு அமைப்பு மூலம் தீர்த்துவைக்கப்பட்டுள்ளது.
சோனார்பூரில் உள்ள மிலன்பள்ளி என்னும் பகுதியில் வசிப்பவர்கள் தபன் மொண்டல் - ரூபாலி மொண்டல் தம்பதி. இவர்கள் கரோனா காலகட்டத்தில் தங்கள் வீட்டை வாடகைக்கு விட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து அந்த வீட்டை பொம்பல் என்பவர் வாடகைக்கு எடுத்து அவரது மனைவி தும்பா மொண்டலுடன் அங்கு வசித்து வந்துள்ளார். சில காலம் இருவரும் அங்கு வசித்து வந்த நிலையில், திடீரென பொம்பல் அங்கிருந்து சொல்லாமல் கொள்ளாமல் காலி செய்துள்ளார்.
அவர் காலி செய்த சில நாட்களில் பொம்பலின் உறவினர் ஒருவர் வந்து, அவர் செலுத்தாமல் விட்ட வாடகைக்காக, அவருக்குச் சொந்தமான பொருட்கள் என அனைத்தையும் எடுத்துச்சென்றுள்ளார். இதற்கிடையே குல்தாலி பகுதியில் வசிக்கும் தும்பா மொண்டலின் தந்தை லக்ஷ்மண் மொண்டல், தனது மகளைக் காணவில்லை என சோனார்பூர் காவல் நிலையத்தில் மார்ச் 2020ல் புகார் அளித்துள்ளார். அதனைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் முதற்கட்ட விசாரணையை, தும்பா மொண்டலின் கணவரான பொம்பலிடமிருந்து ஆரம்பித்துள்ளனர்.
சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட பொம்பல் போதுமான ஆதாரமற்ற காரணத்தால் அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் போடப்பட்ட மேல்முறையீட்டின் காரணமாக இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி விசாரணையில் குடும்பச் சண்டை காரணமாக கணவரே மனைவியை கொன்று செப்டிக் டேங்கில் மறைத்து வைத்த கொடூரச் சம்பவம் தெரிய வந்துள்ளது.