தெலங்கானா:நாடு முழுவதும் பல மாநிலங்களில் கடந்த ஓரிரு வாரங்களாக தக்காளியின் விலை அதிகரித்து காணப்படுகிறது. பல மாநிலங்களில் ஒரு கிலோ தக்காளி 200 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது. தொடர் மழை காரணமாக தக்காளி விளைச்சல் குறைந்ததே இந்த விலை உயர்வுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. தக்காளி விலை உயர்வால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதற்கிடையில், தக்காளி விலை உயர்வு காரணமாக தக்காளியைத் திருடுவது, தக்காளியைப் பரிசாகக் கொடுப்பது உள்ளிட்ட சம்பவங்களும் நடந்து வருகின்றன.
அந்த வகையில், தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் ஒரு சுவாரசிய சம்பவம் நடந்துள்ளது. நபர் ஒருவர், தனது மகளின் பிறந்தநாள் விழாவில் விருந்தினர்களுக்கு வழக்கமான விருந்துடன் பரிசாக தக்காளியை விநியோகம் செய்துள்ளார். ஹைதராபாத்தின் பஞ்சகுட்டா பிரதாப் நகர் பகுதியில் நேற்று(ஜூலை 19) அரசியல் பிரமுகரான சிவ மதிகா என்பவரது மகளின் பிறந்தநாள் விழா நடைபெற்றது.
மகளின் பிறந்தநாளை சிறப்பானதாக மாற்ற நினைத்த சிவ மதிகா, சுமார் 400 கிலோ தக்காளியை விலைக்கு வாங்கி விருந்தினர்களுக்கு விநியோகம் செய்துள்ளார். விழாவுக்கு வந்த விருந்தினர்கள் மட்டுமல்லாமல் உள்ளூர் மக்களும் முண்டியடித்துக் கொண்டு தக்காளியை வாங்கிச் சென்றனர்.