பெலகாவி (கர்நாடகா):இந்தியாவில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 2 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.
மாநில அரசுகள் கரோனா கட்டுப்பாடுகளை தீவிரமாக அமல்படுத்தி வருகின்றன.
ஒன்றிய அரசு கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக பொது மக்கள் முகக்கவசம், தனி நபர் இடைவெளியைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. பொது வெளியில் முகக்கவசம் அணியாமல் வரும் நபர்களுக்கு அந்தந்த மாநில அரசுகள் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகின்றன.
முகக்கவசம் அணிய விருப்பம் இல்லை
இந்தநிலையில், கர்நாடகா மாநில வனத்துறை அமைச்சர் உமேஷ் கட்டி அரசு விழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அமைச்சர் பொதுவெளியில் முகக்கவசம் அணியாமல் வந்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த அமைச்சர், "பிரதமர் மோடி முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை. அது தனிநபரின் பொறுப்பு எனக் கூறியுள்ளார். முகக்கவசம் அணிய விரும்புபவர்கள் அணியலாம். எனக்கு முகக்கவசம் அணிய விருப்பம் இல்லை, அதனால் நான் அணியவில்லை. இது என்னுடைய தனிப்பட்ட விருப்பம்" எனத் தெரிவித்தார். அமைச்சர் கூறிய இந்த விளக்கம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று (ஜன.18) செவ்வாய்க்கிழமை 41 ஆயிரத்து 457 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் விகிதம் 22.30 விழுக்காடாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கோவா சட்டப்பேரவைத் தேர்தல்: சிவசேனா - தேசியவாத காங்., கூட்டணி