டெல்லி, பட்பர்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த அனு என்ற மாணவி, கடந்த வாரம் தனது வீட்டின் அருகே உள்ள சாக்கடை ஓடையில் குழந்தை அழும் சத்தம் கேட்டு சென்று பார்த்துள்ளார். அப்போது, அங்கு பிறந்து சில மணிநேரங்களே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று சாக்கடை ஓடையில் அழுதவாறு இருந்துள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மாணவி, உடனடியாக அக்குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக மருத்துமனைக்கு கொண்டு சென்றார்.
பசியிலும் குளிரிலும் தவித்த குழந்தை
இதுகுறித்து பள்ளி மாணவி அனு கூறுகையில், "கடந்த வாரம் கண்காணிப்புக் கேமரா காட்சிகளைப் பார்த்தபோது இரவு 10.50 மணியளவில் பெண் ஒருவர் குழந்தையை சாக்கடை ஓடையில் வீசிச் செல்வது பதிவாகியுள்ளது. இக்குழந்தை சுமார் 11 மணிநேரம் கழித்து சாக்கடையிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
தண்ணீரில் குழந்தை குளிர், பசியால் நடுங்கி அழுதுகொண்டிருந்தது. தொடர்ந்து, நான் குழந்தையை உடனடியாக மீட்டு உள்ளூர் மருத்துவமனையில் அனுமத்திதேன். முதல்கட்ட சிகிச்சைக்குப் பின் மருத்துவரின் பரிந்துரையின்பேரில் சாச்சா நேரு மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்தோம். கடந்த ஐந்து நாள்களாக நான் குழந்தையை கவனித்து வருகிறேன். குழந்தைக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு நலமுடன் உள்ளது" என்றார்.
இது குறித்து பஹர்ஹால் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து குழந்தையின் பெற்றோரைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.