மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து கடந்த டிசம்பர் 30ஆம் தேதி உத்ரகாண்ட் மாநிலம், ரூர்க்கி அருகே சாலையோர தடுப்பில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயம் அடைந்த ரிஷப் பண்ட் டேராடூனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து டேராடூனில் இருந்து டெல்லி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவருக்கு முதற்கட்ட சிகிச்சைகள் மற்றும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது. தொடர்ந்து ரிஷப் பண்ட் மும்பை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் கால் மூட்டு பகுதியில் ஏற்பட்ட தசை நார் காயத்தை குணப்படுத்த, ரிஷப் பண்ட்-க்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர்.
முழங்கால் பகுதியில் அறுவை சிகிச்சை செய்து 10 நாட்களுக்குப் பிறகு, அவரது தசைநார்கள் இயற்கையாக குணமாகிறதா என்பதை மதிப்பிடுவதற்காக மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ள ரிஷப் பண்ட் இன்னும் 2 வாரங்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
காயம் அடைந்த தசைநார்கள் இயற்கையாக குணமாக நான்கு முதல் ஆறு வாரங்கள் வரை ஆகும் என்றும்; அவர் மீண்டும் விளையாட 6 மாதங்கள் வரை ஆகலாம் என்றும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காயங்கள் குணமான பின் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு அனுப்பப்படும் ரிஷப் பண்ட், தனது உடல் தகுதியை நிரூபித்ததும் இந்திய அணியில் சேர்த்துக் கொள்ளப்படுவார் என பிசிசிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:நேரலையில் ஆபாச முனங்கல் சப்தம்.. மன்னிப்பு கேட்ட பிபிசி..