டெல்லி : இந்திய திரைத் துறையில் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் தாதா சாஹேப் பால்கே விருது பழம்பெரும் நடிகை வஹிதா ரஹ்மானுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தை சேர்ந்தவரான வஹிதா ரஹ்மான் கடந்த 1938ஆம் ஆண்டு செங்கல்பட்டில் பிறந்தார். தமிழில் எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளிவந்த அலிபாபவும் நாற்பது திருடர்களும் படத்தில் நடித்து உள்ளார். நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளிவந்த விஸ்வரூபம் இரண்டாம் பாகத்தில் அவருக்கு அம்மா கதாபாத்திரத்தில் வஹிதா ரஹ்மான் நடித்து இருந்தார்.
இந்த நிலையில் அவருக்கு திரைத் துறையின் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் தாதா சாஹெப் பால்கே விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தன் எக்ஸ் பக்கத்தில், இந்திய திரைத் துறைக்கு தனது நீங்கா பங்களிப்பை அளித்து வரும் வஹிதா ரஹ்மானுக்கு சினிமா துறையில் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் தாதா சாஹேப் பால்கே விருது அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சியும், மரியாதையும் அடைகிறேன் என்று பதிவிட்டு உள்ளார்.
பாலிவுட் சினிமாவில் பயாசா, காகஸ் கி புல், சவுதவி கா சந்த், சாஹேப் பீவி அவுர் குலாம், கைடு, கமோஷி உள்ளிட்ட பல்வேறு படங்கள் மூலம் தனது திறமையை வெளிப்படுத்தி உள்ளார் என தெரிவித்து உள்ளார். நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு மதிப்பளிக்கும் வகையிலான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றபட்டு உள்ள நிலையில், இந்திய சினிமாவில் கோலோச்சி வரும் வஹிதா ரஹ்மானுக்கு மதிப்பு மிக்க விருது அறிவிக்கப்பட்டு உள்ளதாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.
இதையும் படிங்க :Thirumavalavan : திருமாவளவன் மருத்துவமனையில் அனுமதி! என்ன காரணம்?