டாக்கா : வங்கதேச பொதுத் தேர்தலில் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி வெற்றி பெற்ற நிலையில், 4வது முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது. பிரதமராக 5வது முறை ஷேக் ஹசீனா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
முன்னாள் பிரதமர் காலித்யா ஷியா சிறையில் உள்ள நிலையில், பொதுத் தேர்தலை புறக்கணிப்பதாக வங்கதேச தேசியவாத கட்சி அறிவித்தது. இதையடுத்து நடந்த 300 தொகுதிகளுக்கான நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி 223 இடங்களை கைப்பற்றியது.
1991 ஆம் ஆண்டுக்கு பின்னர் வங்கதேசத்தில் ஜனநாயகம் நிறுவப்பட்ட பின் நடந்த 12 பொதுத் தேர்தல்களில் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மட்டும் வெறும் 40 சதவீத வாக்குகளே பதிவானதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தேர்தல் வெற்றிக்கு பின்னர் 5வது முறையாக வங்கதேசத்து பிரதமராக ஷேக் ஹசீனா பதவி ஏற்க உள்ளார்.
இந்நிலையில், இந்தியாவுடனான நட்புறவு குறித்து பேசிய வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா, வங்கதேசத்தின் சிறந்த நட்பு நாடு இந்தியா என்றும் 1971 மற்றும் 1975ஆம் ஆண்டு ஏற்பட்ட இக்கட்டான சூழல்களில் இந்தியா, வங்கதேசம் பக்கம் நின்று பல்வேறு உதவிகளை வழங்கியதாகவும் தெரிவித்து உள்ளார்.
தனக்கும், தனது சகோதரி மற்றும் மற்ற குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் அடைக்கலம் அளித்த நாடு இந்தியா என ஷேக் ஹசினா குறிப்பிட்டு உள்ளார். ஷேக் ஹசினாவின் குடும்ப உறுப்பினர்கள் கொல்லப்பட்டும் தான் நாடு கடத்தப்பட்ட போது இந்தியாவில் 6 ஆண்டுகள் தஞ்சமடைந்தது குறித்து ஷேக் ஹசினா நினைவு கூர்ந்தார்.
அனைத்து நாடுகளுடனும் நல்லுறவு பேணுவதாகவும் அதையே தனது தாரக மந்திரமாக கொண்டு உள்ளதாகவும் ஷேக் ஹசினா தெரிவித்து உள்ளார். மேலும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதில் தனது அரசு மும்முரம் காட்டும் என அவர் கூறி உள்ளார்.
இந்திய முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, இலங்கை முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பந்திரநாய்கே ஆகியோருடன் தன்னை ஒப்பிடுவதாகவும் அவர்கள் தலை சிறந்த பெண்கள் என்றும் தான் அவர்களை போல் இல்லை என்றும் ஷேக் ஹசினா கூறி உள்ளார். மேலும், தான் சர்வசாதாரணமான நபர் என்றும் பொது மக்களில் ஒருவர் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.
கடந்த 1975 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முன்னாள் பிரதமர் ஷேக் முஜிபுர் ரஹ்மான், அவரது மனைவி மற்றும் மூன்று மகன்கள் உள்ளிட்டோருடன் தனது வீட்டில் ராணுவ அதிகாரிகளால் படுகொலை செய்யப்பட்டார். இந்த தாக்குதலில் இருந்து உயிர் தப்பிய ஷேக் ஹசினா மற்றும் மற்றும் அவரது சகோதரி ரெஹனா வெளிநாடுகளில் தஞ்சமடைந்தனர்.
இதையும் படிங்க :மாலத்தீவு புறக்கணிப்பு! லட்சத்தீவுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுப்பு! சூட்சமம் என்ன?