வங்கதேசம்:இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. முதல் மற்றும் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் முறையே ஒரு விக்கெட் மற்றும் 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி தொடரையும் இழந்தது.
ஆறுதல் வெற்றிக்கான முயற்சி:இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி, சட்டோகிராம் மைதானத்தில் இன்று (டிசம்பர் 10) நடைபெற்றது. ஓயிட் வாஷ் முறையை தவிர்க்கவும், ஆறுதல் வெற்றியை பெறும் முனைப்பிலும் இந்திய அணி முனைப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கையில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியில் இருந்து ரோகித் சர்மா விலகிய நிலையில், அணியை கே.எல். ராகுல் வழிநடத்தினார். டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
கேப்டன் கே.எல். ராகுல்:களமிறங்கிய சிறிது நேரத்தில் தொடக்க வீரர் ஷிகர் தவான் 3 ரன்களில் எல்.பி.டபிள்யூ.வாகி வெளியேறினார். அடுத்து களமிறங்கிய விராட் கோலி, மற்றொரு தொடக்க வீரர் இஷான் கிஷனுடன் சேர்ந்து தீவிர ரன் சேகரிப்பில் ஈடுபட்டார். வங்கதேச வீரர்களின் பந்துவீச்சை துவம்சம் செய்த இஷான், மைதானத்தின் நாலாபுறமும் பந்துகளை சிதறவிட்டு ரன்மழை பொழிந்தார். 85 பந்துகளில் தனது முதலாவது சர்வதேச சதத்தை அடித்த இஷான், தொடர்ந்து ரன் சேகரிப்பில் ஈடுபட்டார்.
இஷான் கிஷன் இரட்டை சதம்:வங்கதேச பந்துவீச்சை விளாசிய இஷான் கிஷன், 126 பந்துகளில் 200 ரன்கள் கடந்து தன் முதல் இரட்டை சதத்தை அடித்தார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சதம் அடிக்காமலே இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற அரிய சாதனையை இஷான் படைத்தார். குறைந்த பந்துகளில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற மற்றொரு சாதனையையும் இஷான் படைத்தார். அதற்கு முன் 2015ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெயில், 138 பந்துகளில் இரட்டை சதம் அடித்ததே முந்தைய சாதனையாக இருந்தது.