சண்டிகர் : விவசாயிகளின் போராட்டம் குறித்து ஹரியானா அமைச்சர் அனில் விஜ் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், அரவிந்த் கெஜ்ரிவால் மீதும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார்.
விவசாயிகள் தங்களின் போராட்டத்தினை உயிர்ப்புடன் வைத்திருக்க பல விதமாக போராட்டங்களை தொடர்வதாக குற்றஞ்சாட்டிய அவர் தொடர்ந்து கூறுகையில், விவசாயிகள் கடந்த எட்டு மாதங்களாக எல்லையில் அமர்ந்திருக்கிறார்கள்.
அவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். ஆகவே, போராட்டத்தை உயிர்ப்போடு வைத்திருக்க, சங்கத் தலைவர்கள் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய திட்டத்தை உருவாக்குகிறார்கள். அந்த வகையில் இன்று ஆளுநர் அலுவலகத்திற்கு சென்றுள்ளனர்” என்றார்.
மேலும் காங்கிரஸ் கட்சி மீதும் அவர் குற்றஞ்சாட்டினார். அப்போது, “நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் அழிக்க விரும்பும் அனைவருக்கும் காங்கிரஸ் ஆதரவளிக்கிறது, நாட்டின் எதிரிகளிடம் நட்பின் கையை நீட்ட விரும்புகிறது. காங்கிரஸ் என்றென்றும் அவர்களுடன் உள்ளது” என்றார்.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குறித்து கூறுகையில், “கரோனா இரண்டாம் அலை பரவலின்போது, டெல்லி முதலமைச்சர் மற்றும் அவரது சகாக்களால் அப்பாவி மக்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். தவறான தரவுகளை அளித்து டெல்லி அரசாங்கம் தேவைக்கு அதிகமான ஆக்ஸிஜனை கோரியது. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்றார்.
டெல்டா பிளஸ் மற்றும் மரபணு மாற்ற கரோனா வைரஸ் பரவல் குறித்து கூறுகையில், “இந்தப் பரவலை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது. இது குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளோம்” என்றார்.
இதையும் படிங்க : கரோனா: இனி கர்ப்பிணிகளுக்கும் தடுப்பூசி