கர்நாடகா மாநிலம், சிந்தமணியில் உள்ள சோமயாஜலஹள்ளியில் ஏப்ரல் 21ஆம் தேதி மழை பெய்தது. அப்போது அங்கு வசித்து வந்த அம்பரீஷ் என்பவரின் வீட்டை இடி, மின்னல் தாக்கியது. இதில் வீடு இடிந்து விழுந்தது.
இரவு நேரம் என்பதால் அம்பரீஷ் அவரது குடும்பத்தினர் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தனர். வீடு இடிந்து விழுந்ததில் அம்பரீஷ் உள்பட ஆறு பேர் படுகாயம் அடைந்தனர். அம்பரீஷ் குடும்பத்தினரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெங்களூரு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதில் சிகிச்சை பலனின்றி ஏப்.25ஆம் தேதி அம்பரீஷும், அவரது நான்குவயது பேரன் கெளதமும் உயிரிழந்தனர். அதே போல் ஏப்ரல் 26ஆம் தேதி அம்பரீஷின் மூத்த மகள் வணிஸ்ரீ, ஏப்ரல் 27ஆம் தேதி இளைய மகள் லாவண்யா ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
தற்போது அம்பரீஷின் மனைவி காயத்ராம்மா, அவரது தந்தை ஜெகன், மகன் தர்ஷன் ஆகியோர் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் இருவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வீடு இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் அடுத்தடுத்து உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.