தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 26, 2021, 6:26 AM IST

ETV Bharat / bharat

நாட்டு விரோத திட்டத்தை கொண்டுவந்துள்ள மத்திய அரசு - நாராயணசாமி கண்டனம்

ஆறு லட்சம் கோடி ரூபாய் பொதுச்சொத்துகளைத் தனியாரிடம் தாரைவார்க்கும் மிகப்பெரிய நாட்டு விரோதத் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது என்று புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

மோடி அரசு - நாராயணசாமி கண்டனம்
மோடி அரசு - நாராயணசாமி கண்டனம்

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி மத்திய அரசுக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காணொலி பதிவில், "மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டிலுள்ள ஆறு லட்சம் கோடி ரூபாய் பொதுச்சொத்துகளைத் தனியாரிடம் தாரைவார்க்கும் மிகப்பெரிய நாட்டு விரோதத் திட்டத்தைக் கொண்டுவந்துள்ளார்.

அதில், விமான நிலையங்கள், ரயில்வே துறை, தொலைத்தொடர்புத் துறை, மின் விநியோகம், நிலக்கரி சுரங்கங்கள் என லட்சக்கணக்கான பேருக்கு வேலை கொடுக்கின்ற நிறுவனங்களை எல்லாம் தனியாரிடம் தாரைவார்த்துக் கொடுத்து, அதன்மூலம் நாட்டை திவாலாக்குகின்ற திட்டத்தை அறிவித்துள்ளார்.

சொத்துகளின் உரிமம் மாற்றப்படாது, அது மத்திய அரசோடு இருக்கும். ஆனால், அதனைப் பயன்படுத்துகின்ற உரிமத்தைத் தனியாரிடம் கொடுப்போம் என்கிறார். ஏற்கெனவே மோடி அரசு பல பொதுத் துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்கியுள்ளது.

புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர்

அத்தோடு சேர்த்து இவற்றையும் கொடுக்க நடவடிக்கை எடுக்கின்றனர். இதனை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்க்கும். தற்போது, சாதிவாரி கணக்கெடுப்பு நாடு முழுவதும் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுபெற்றுள்ளது.

நாடாளுமன்றத்தில் இது குறித்து கேள்வி எழுப்பும்போது, 'சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டிய அவசியமில்லை' என்று மோடி அரசு கூறியுள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு எடுப்பதன் மூலம் நாட்டில், இடஒதுக்கீடு கொடுப்பதற்கான வாய்ப்பை உருவாக்க முடியும்.

மேலும், புதுச்சேரி மாநிலத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரை ஆகஸ்ட் 26ஆம் தேதி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரிக்கு அரசு வைத்த கோரிக்கை ஒன்றைக்கூட மத்திய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை.

ஆகஸ்ட் 26ஆம் தேதி புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் அறிவிப்பு

கூட்டத்தொடரில்...

புதுச்சேரி மாநிலத்தை மத்திய நிதி ஆணையத்தில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது. எங்களது ஆட்சியில்,

  • 2020-21ஆம் ஆண்டுக்கு ரூ. 100 கோடி மானியம் அதிகமாகப் பெற்றோம்.
  • 2021-22ஆம் ஆண்டு ரங்கசாமி தாக்கல்செய்யும் பட்ஜெட்டில் மத்திய அரசு அதிகப்படியாக உயர்த்திக் கொடுத்த மானியம் ரூ.24 கோடிதான்.

புதுச்சேரியில் பாஜகவுடன் இணைந்த அரசு வந்தால், நிறைய நிதி கிடைக்கும். வேலைவாய்ப்பு அதிகரித்து, மூடியுள்ள பஞ்சாலைகள் திறக்கப்படும். எட்டாயிரம் கோடி ரூபாய் கடன் ரத்து செய்வார்கள் எனப் பட்டியலிட்டனர். ஆனால், முதல் பட்ஜெட்டிலேயே ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.

  • பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட ரூ.10,100 தொகையில் ரூ. 200 கோடி குறைத்து, ரூ. 9,900 கோடிக்கு மட்டும் ஒப்புதல் கொடுத்ததாகத் தகவல்கள் வருகின்றன.

இதிலிருந்து மத்திய பாஜக அரசு காங்கிரஸ் ஆட்சியில் எப்படி புறக்கணித்ததோ, அதேபோன்று ரங்கசாமி ஆட்சியையும் மத்திய மோடி அரசு புறக்கணிக்கிறது. கடந்த நான்கு மாதங்களாக எந்த ஒரு திட்டமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

பட்ஜெட் கூட்டத்தொடரில் என்னென்ன புதிய அறிவிப்புகள் அறிவிப்பார் என்பதைப் பார்ப்போம். எந்த ஆட்சி இருந்தாலும், மத்தியிலுள்ள மோடி அரசு புதுச்சேரியைப் புறக்கணிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 'விவசாயக்கடன் 5% உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் - பேரவையில் அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்'

ABOUT THE AUTHOR

...view details