புதுச்சேரி: மதுபானக் கடைகள் திறப்பு குறித்து புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், “அண்டை மாநிலமான தமிழ்நாட்டில் மதுக்கடைகள் திறக்கப்படவில்லை. இதன் தாக்கம் புதுச்சேரியில் உள்ளது. மாநில எல்லையில் உள்ள மதுக்கடைகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் கூட்டம் கூட்டமாக வந்து மதுபாட்டில்களை வாங்கி கொண்டு செல்கின்றனர்.
இதனால் கரோனா தொற்று மறுபடியும் தாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை அரசு புரிந்து கொள்ள வேண்டும். மக்கள் மத்தியில் விஷப்பரிட்சையை இந்த அரசு செய்யக் கூடாது.
முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி புதுச்சேரியில் அரசியல் துரோகிகள் நிறைய பேர் வெற்றி பெற்று வந்துள்ளார்கள். இதில் சில அரசியல் கோமாளிகளும் வந்துள்ளார்கள். இவர்களை எல்லாம் எங்களது ஆட்சியில் கட்டுக்குள் வைத்திருந்தோம்.
அந்த கோமாளிகளுக்கு, மக்கள் கள்ளச்சாராயத்தை குடித்து இறப்பதும், கரோனா தொற்றால் ஒரு மாதத்தில் 750 பேர் இறந்ததும் கண்ணுக்கு தெரியவில்லை. மேலும், கவர்னரை சந்தித்து மதுக்கடைகளை திறக்க வேண்டும் எனக் கூறுகிறார்கள். இந்த அரசியல் கோமாளிகளை கட்டுக்குள் வைத்திருக்கு இந்த அரசுக்கு துப்பு கிடையாது.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனப் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். புதுச்சேரி முதலமைச்சர் என்ன செய்கிறார் என்று தெரியவில்லை. எனவே ஒன்றிய அரசு நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமருக்கும், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதி உள்ளேன்.
தற்போது பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டிவிட்டது. டீசல் விலை 92 ரூபாய் வந்துவிட்டது. காங்கிரஸ் ஆட்சியில் பெட்ரோல் விலையை ஒரு ரூபாய் உயர்த்தினால் கூட தெருவில் இறங்கி போராடிய பாஜக, இன்று வாயை மூடிக் கொண்டிருக்கிறது.
தேர்தல் முடிவு வெளியாகி ஒரு மாதத்திற்கு மேலாகியும் முதலமைச்சரை தவிர அமைச்சர்கள் யாரும் பொறுப்பேற்கவில்லை. அதிகார சண்டையில் கவனம் செலுத்தி வருகின்றனர். மக்களுக்கு பயனளிக்காத அளவில் இந்த ஆட்சி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
என்ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி, ஆட்சி வந்தால் மத்தியில் இருந்து பல்லாயிரணக்கான கோடி ரூபாயை கொண்டு வந்து மாநிலத்தில் வளர்ச்சியை காண்போம் என்று கூறினார்கள். இப்போது அவர்கள் எங்கே போனார்கள் என்று தெரியவில்லை. இதையெல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நாடகங்கள் எல்லாம் விரைவில் அம்பலமாகும். மக்களை காப்பாற்ற இந்த அரசு தவறிவிட்டது” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 10ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியலில் மார்க் கிடையாது!