ஆந்திரா மாநிலம் திருப்பதியில் உள்ள எஸ்.வி.ஆர் ருயா அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் நிரப்புவதில் 5 நிமிடம் கால தாமதம் ஏற்பட்டதால் கரோனா நோயாளிகள் 11பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்த மருத்துவமனையில் 700க்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவிலிருந்த ஆக்ஸிஜன் கையிருப்பு திடீரென தீர்ந்து விட்டதால், அதனை மீண்டும் நிரப்பியுள்ளனர். இதற்கு 5 நிமிடம் கால தாமதமானதால், 11 பேர் உயிரிழக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இருப்பினும், விரைவாக ஆக்ஸிஜன் சப்ளை கொடுக்கப்பட்டதால், பல நோயாளிகளின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அம்மாவட்ட ஆட்சியர் ஹரி நாரயணன் கூறுகையில், "சென்னையில் இருந்து மருத்துவமனைக்கு வரும் ஆக்ஸிஜன் டேங்கர் வர தாமதமானது. இரவு 8 மணி முதல் 8.30 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்தது, ஆக்ஸிஜன் அழுத்தம் பிரச்னைகள் காரணமாக, வென்டிலேட்டர் ஆதரவில் இருந்த சில கரோனா நோயாளிகள் உயிரிழந்தனர். இது ஐந்து நிமிட இடைவெளியில் நடந்துள்ளது. விரைவாக டேங்கர் கொண்டு வரப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. பெரிய அளவிலான உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளன. இங்கு ஆக்ஸிஜன் தட்டுபாடு இல்லை" எனத் தெரிவித்தார்.
இவ்விவகாரம் குறித்து விரைவாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.