ஹூபளி (கர்நாடகா):கர்நாடக மாநிலம், தார்வாட் மாவட்டத்தில் உள்ள கலகதகி தாலுகாவில் இருக்கும் ஜின்னூர் கிராமத்தில், பசப்பா அகடி - கல்லாவா அகடி என்ற தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், 52 ஆண்டுகளுக்கு முன்பு இந்த தம்பதியினர் விவாகரத்து பெற்றுள்ளனர். நீதிமன்ற உத்தரவுப்படி கணவர் பசப்பா அகடி, மாதந்தோறும் அவரது விவாகரத்தான மனைவி கல்லாவுக்கு ஜீவனாம்சம் வழங்கி வந்தார்.
ஆனால், கடந்த சில மாதங்களாக பசப்பா, கல்லாவுக்கு ஜீவனாம்சம் வழங்கவில்லை. இதனால் மீண்டும் கல்லாவா நீதிமன்றத்தை அணுகியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த உள்ளூர் மூத்த திவானி நீதிமன்றம், தேசிய மெகா-லோக் அதாலத்தில் வழக்கை நடத்த முடிவு செய்தது. ஜீவனாம்சம் செலுத்தத் தவறிய பசப்பா அகடிக்கும் நீதிமன்றம் அழைப்பு விடுத்திருந்தது.
அப்போது, நீதிமன்றத்தில் வயதான தம்பதியரை பார்த்த நீதிபதி ஜி.ஆர்.ஷெட்டர் ஆச்சரியமடைந்தார். காரணம், கணவர் பசப்பா அகடிக்கு வயது 85; மனைவி கல்லாவா அகடிக்கு வயது 80. தொடர்ந்து, நீதிபதி இருவரிடமும் சமரச பேச்சுவார்த்தை நடத்தி தம்பதியை இணைந்து வாழச்செய்தார்.