மத்திய டெல்லி, ஜிபி சாலைப் பகுதி பெரும் வர்த்தகப் பகுதியாகச் செயல்பட்டுவருகிறது. அப்பகுதியில், கடைகள், பொதுமக்கள் கூட்டம் என எப்போதும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும். அதேபகுதியில் உள்ள ஒரு கடையில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து டெல்லி தீயணைப்புச் சேவை அலுவலர்கள் இரவு 7.04 மணிக்கு ஐந்து தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
சம்பவ இடத்திற்கு காவல் துறையினரும் விரைந்து சென்றனர். அப்பகுதி மிகவும் நெரிசலான, சிறிய பாதையாக இருந்ததால் தீ அருகிலிருந்த ஒரு கட்டத்திற்குப் பரவியது. இந்தக் கட்டடத்தில் சிக்கியிருந்த 70 பாலியல் தொழிலாளர்களின் உயிர்களைக் காவலர் ஒருவர் காப்பாற்றியுள்ளார்.
இந்தத் தீ விபத்தால் கட்டடம் முழுவதும் புகை மூட்டமாக இருந்தது, இருப்பினும் தன் உயிரை பணயம்வைத்து உள்ளே நுழைந்து 70 பாலியல் தொழிலாளர்களையும் ஒவ்வொருவராக மீட்டு வெளியே அழைத்து வந்துள்ளார். தக்க நேரத்தில் காவலர் சென்று 70 பேரின் உயிரையும் காப்பாற்றியுள்ளார். காவலரின் இந்தச் செயல் வெளியே தெரியவர அவருக்குப் பாராட்டுகள் குவிந்துவருகின்றன. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
ஈடிவி பாரத்திடம் பேசிய பாலியல் தொழிலாளர் ஒருவர் கூறுகையில், சரியான நேரத்தில் காவலர் வந்து எங்களைக் காப்பாற்றியுள்ளார். நாங்கள் இன்னும் கொஞ்சம் நேரம் உள்ளே இருந்திருந்தால் எரிந்து சாம்பலாகி இருப்போம். எரிவாயு உருளையால் இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்தார்.