இந்தியாவில் கரோனா முதல் அலையைக் காட்டிலும், இரண்டாம் அலையில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. தினந்தோறும் நான்காயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், இந்தியாவில் கரோனா இரண்டாம் அலையில் 80 விழுக்காடு மக்கள், டெல்டா வேரியண்டால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்தியா SARS-CoV-2 மரபியல் கூட்டமைப்பின் தலைவர் மருத்துவர் என்.கே.அரோரா தெரிவித்துள்ளார்.
80 விழுக்காடு மக்களுக்கு டெல்டா வகை பாதிப்பு
இதுகுறித்து அவர் கூறுகையில், "டெல்டா வேரியண்ட் முதன்முதலாக அக்டோபர் 2020இல் கண்டறியப்பட்டது. இதன் காரணமாகவே கரோனா இரண்டாம் அலை பரவியது. இரண்டாம் அலையில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 80 விழுக்காடு மக்களுக்கு, டெல்டா வேரியண்ட் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
ஆல்பா மாதிரியைவிட டெல்டா அதி வேகமாகப் பரவும்
ஆல்பா மாதிரியை விட டெல்டா வேரியண்ட், 40 முதல் 60 விழுக்காடு வேகமாகப் பரவும் தன்மை கொண்டது. அமெரிக்கா, சிங்கப்பூர் உள்பட 80க்கும் மேற்பட்ட நாடுகளில் டெல்டா வேரியண்ட் ஏற்கனவே பரவியுள்ளது.
புதிய மரபியல் மாற்றம் அடைந்த கரோனா பரவும் பட்சத்தில், பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 11 மாநிலங்களில் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட 55 முதல் 60 பேர் டெல்டா வகை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர்.
தடுப்பூசிகள் சிறப்பாக செயல்படுகிறது
வைரஸின் பரவும் தன்மை, நோய் எதிர்ப்பு சக்தி, தடுப்பூசிக்கு எதிரான வைரஸின் திறன் ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
டெல்டா வகை மிகத் தீவிரமாக பரவும் தன்மை கொண்டது. தற்போது பயன்பாட்டில் இருக்கும் தடுப்பூசிகள், டெல்டா வேரியண்ட்களுக்கு எதிராக சிறப்பாக செயல்படுகிறது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:உளவு பார்க்கிறதா பெகாசஸ்? - மோடியும் அமித் ஷாவும் தெளிவுப்படுத்த கோரிக்கை