டெல்லியில் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள், பயங்கரவாதத்தைத் தடுப்பதற்கான நிதியுதவி மற்றும் அதிகரிக்கும் சவால்களை எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் மாநாடு நடந்துவருகிறது. இந்த மாநாடு உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடக்கிறது. அவருடன் உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய், உள்துறை செயலாளர் அஜய்குமார் பல்லா, தேசிய புலனாய்வு அமைப்பின் தலைமை இயக்குநர் தினகர் குப்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள் மீது தடைகள் விதிக்கப்பட்டு தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். பயங்கரவாதத்தை ஆதரிக்கும் எவருக்கும் எந்த நாட்டிலும் இடமில்லை என்ற நிலை ஏற்பட வேண்டும். பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில் எந்தவிதமான தெளிவற்ற தன்மையையும் தவிர்க்கப்பட வேண்டும். பயங்கரவாதத்தை வெளியுறவுக் கொள்கையாகப் பயன்படுத்தும் நாடுகளுக்கு எதிராக மற்ற நாடுகள் தடைவிதிக்க வேண்டும்.
பயங்கரவாதத்தின் நீண்டகால தாக்கம் ஏழைகள் மற்றும் உள்ளூர் பொருளாதாரத்தின் மீது கடுமையாக உள்ளது. அதன் விளைவாக மக்களின் வாழ்வாதாரம் பறிபோகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக பயங்கரவாதத்திற்கு நிதி அளிப்பதன் வேரை தாக்கி அழிப்பது மிக முக்கியமானது. பயங்கரவாதத்தில் நல்ல பயங்கரவாதம், மோசமான பயங்கரவாதம் என பாகுபாடு எதுவும் இல்லை. அது மனிதநேயம், சுதந்திரம் மற்றும் நாகரீகத்தின் மீதான தாக்குதல் மட்டுமே. அதற்கு எல்லைகள் எதுவும் கிடையாது. சில நாடுகள் தீவிரவாதிகளை தங்களது வெளியுறவுக்கொள்கையின் ஒருபகுதியாகவே வைத்துள்ளன.
புதிய வகையிலான தொழில்நுட்பங்கள் பயங்கரவாதத்திற்கு நிதி அளித்தல் மற்றும் ஆள்சேர்ப்புக்கு பயன்படுத்தப்படுகின்றன. இதனை தடுக்க வேண்டும். இந்த முயற்சிகளில் தனியார் துறையை ஈடுபடுத்த வேண்டியது அவசியம் ஏற்பட்டுள்ளது. பயங்கரவாதத்தை கண்காணித்து, கண்டுபிடித்து அதை கட்டுப்படுத்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் அதேநேரத்தில், தொழில்நுட்பத்தை அச்சுறுத்தல் அம்சமாக மாற்றி விடக் கூடாது என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:ஐஐடி கான்பூர்: குளிர்சாதன பெட்டிகளில் மலிவு விலை காற்று சுத்திகரிப்பு சாதனம்