டெல்லி:இந்தியாவில் கரோனா பாதிப்பு, ஒமைக்ரான் பரவல் ஆகியவை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம், லேசான அல்லது அறிகுறி இல்லாத கரோனா நோயாளிகள் வீட்டில் தனிமைப்படுத்துதல் தொடர்பாக திருத்தப்பட்ட புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை இன்று (ஜன.5) வெளியிட்டுள்ளது.
அதன்படி,’வீட்டுத்தனிமையில் இருக்கும் நோயாளிகள், தொற்று உறுதி செய்யப்பட்டதில் இருந்து 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
யாருக்கு கரோனா டெஸ்ட் தேவையில்லை?
அதன்படி மூன்று நாட்கள் காய்ச்சல் இல்லையென்றால் வெளியில் வரலாம். மீண்டும் கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டியதில்லை. கட்டாயம் முகக்கவசம் அணிந்து பொது வெளியில் வரவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா நோயாளிகள் மூன்று அடுக்கு முகக்கவசம் அணிய வேண்டும். அதிகபட்சம் 8 மணி நேரம் தான் ஒரு முகக்கவசத்தை பயன்படுத்த வேண்டும். அதன்பிறகு முறையாக அகற்றப்பட வேண்டும்.
வீட்டுத்தனிமையில் இருக்கும் கரோனா நோயாளிக்கு உதவும் நபரும் N-95 mask அணிந்து அவரைச் சந்திக்க வேண்டும். நோயாளிகள் நல்ல காற்றோட்டம் உள்ள அறையில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.