இந்தியாவிடமிருந்து கரோனா தடுப்பூசியை வாங்கிக்கொள்வது தொடர்பாக பிரதமர் மோடியிடம், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தொலைபேசி வாயிலாகப் பேசியுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “எனது நண்பர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் தொலைபேசி வாயிலாக பேசினேன். கனடா கோரியுள்ள கரோனா தடுப்பூசிகளை விநியோகிக்க இந்தியா தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும் என்று அவரிடம் உறுதியளித்தேன். பருவ நிலை மாற்றம், உலகளாவிய பொருளாதார மீட்பு போன்ற பிற முக்கிய விஷயங்களில் தொடர்ந்து ஒத்துழைப்புடன் செயல்பட நாங்கள் ஒப்புக்கொண்டோம்” எனப் பதிவிட்டுள்ளார்.
தொடர்ந்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்டுள்ள அறிக்கையில், "உலகம் கரோனா தொற்றை வென்றெடுக்க முடிந்தால், இந்தியாவின் தடுப்பூசி மருந்து திறனும், அதனை உலக நாடுகளுடன் பகிர்ந்துகொள்ளும் மோடியின் தலைமைதான் காரணம். பிரதமர் மோடிக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்தாண்டின் பிற்பகுதியில் பல்வேறு முக்கியமான சர்வதேச அரங்குகளில் இரண்டு தலைவர்களும் சந்தித்து பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்னைகள் குறித்து விவாதிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. முன்னதாக, விவசாயிகள் போராட்டம் தொடர்பாகக் கனடா பிரதமர் ஆதரவு தெரிவித்தற்கு எதிராக, கனடா தூதருக்கு, வெளியுறவு அமைச்சகம் சார்பில் 'சம்மன்' அனுப்பப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:சீன எல்லையில் அமைதி திரும்ப முழு நடவடிக்கை - மாநிலங்களவையில் ராஜ்நாத் சிங்