கர்நாடகாவில் ஹனகல், சிந்தாக்வி ஆகிய இரு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான பரப்புரையில் ஆளும் பாஜக, காங்கிரஸ் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன.
இந்த தேர்தல் பரப்புரையின் போது மாநில பாஜக நலின் குமார் ராகுல் காந்தி குறித்து சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார். "ராகுல் காந்தி யார். அவர் ஒரு போதை அடிமை, போதைப் பொருள் கடத்துபவர். இது ஊடகத்திலேயே செய்திகளாக வெளியாகியுள்ளன. அவரால் கட்சி நடத்த முடியாது" என நலின் குமார் பேசியுள்ளார்.
காங்கிரஸ் கடும் கண்டனம்
இதற்கு மாநில காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மாநில காங்கிரஸ் தலைவர் டி கே சிவகுமார் இது குறித்து கூறுகையில், "அரசியலில் நாகரீகம், கண்ணியம் ஆகியவற்றை எதிர்க்கட்சி உள்பட அனைவரிடமும் நாம் பின்பற்ற வேண்டும் எனது கட்சியினரிடம் நேற்றுதான் கூறியிருந்தேன்.
இதை பாஜக ஒத்துக்கொண்டு, ராகுல் காந்தி குறித்து மாநில தலைவரின் நாகரீகமற்ற பேச்சுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான சித்தராமய்யா பேசுகையில், "நலின் முதிர்ச்சியற்ற அரசியல்வாதி, இவரைப் போன்ற பொறுப்பற்ற அரசியல்வாதியை நான் கண்டதில்லை. அவர் தன்னிலை மறந்து பேசுகிறார். அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையளிக்க வேண்டும்" என காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:ஜம்மு காஷ்மீரில் ராணுவத் தளபதி ஆய்வு