தமிழ்நாடு

tamil nadu

'காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் மேற்காசிய நாடுகளுடனான உறவில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது'

By

Published : Aug 6, 2020, 6:57 PM IST

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கிய இந்தியாவின் செயல்பாடுகளால், மேற்காசியா நாடுகளுடனான அதன் உறவில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்று இந்திய முன்னாள் தூதர் அனில் திரிகுநாயத் ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Kashmir status change
Kashmir status change

சரியாக நேற்றோடு (ஆகஸ்ட் 5) ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கிவந்த சிறப்பு சட்டப்பிரிவு 370ஐ இந்தியா அரசு நீக்கி ஒரு ஆண்டு காலம் நிறைவடைந்துள்ளது. அதுமட்டமில்லாமல், அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது. இவ்விவகாரம் சர்வதேச அளவில் கவனம் பெற்றது. அண்டை நாடான பாகிஸ்தான் இந்தியாவின் இந்தச் செயலுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்திருந்தது.

அதோடு நில்லாமல் செப்டம்பரில் இவ்விவகாரத்தை ஐநா சபையின் கவனத்திற்கும் எடுத்துச் சென்றது. பாகிஸ்தானின் முயற்சிக்கு துருக்கி, மலேசியா ஆகிய நாடுகள் ஆதரவளிக்கா விட்டாலும், சவுதி அரேபியா, ஈரான் மற்றும் மேற்கு ஆசியாவின் முன்னணி இஸ்லாமிய நாடுகள் ஆதரவளித்தன.

சர்வதேச அளவில் முதல் பக்கத்தை ஆக்கிரமித்திருந்த காஷ்மீர் அந்தஸ்து விவகாரத்தை உலகளாவிய கரோனா பரவல் ஓரங்கட்டியது. இதனால் பாகிஸ்தானின் ஆஸ்தான கூட்டாளியான சீனா மீது சர்வதேச அளவில் விமர்சனங்கள் எழுந்தன. கரோனா பரவல் காஷ்மீர் விவகாரத்தை நீர்த்துப் போகச் செய்தது.

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கியது தொடர்பாக மேற்கு ஆசிய நாடுகளான ஜோர்டான், லிபியா, மால்டா ஆகிய நாடுகளுடனான இந்தியாவின் உறவில் விரிசல் ஏற்பட்டதா, இல்லையா என்பதை அந்நாடுகளுக்கான இந்திய முன்னாள் தூதர் அனில் திரிகுநாயத் ஈடிவி பாரத்திடம் பதிலளிக்கிறார்.

அவர் அளித்த பேட்டியில், “காஷ்மீர் விவகாரம் இந்தியாவைப் பாதிக்கவில்லை என்றே கூற வேண்டும். ஏனெனில், அதற்குப் பின் சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகள் இந்தியாவில் அதிகளவில் முதலீடு செய்து, பொருளாதார வழித்தடத்தை விஸ்தரித்திருக்கின்றன” என்கிறார்.

அவருடனான உரையாடல் பின்வருமாறு:

கேள்வி: மேற்காசிய நாடுகளைப் பொறுத்தவரை இந்தியாவின் முக்கியச் சந்தையாகத் திகழ்கின்றன. தற்போது நிலவும் கரோனா பெருந்தொற்று காலம் மேற்காசிய நாடுகளுடன், குறிப்பாக வளைகுடா நாடுகளுடனான இந்தியாவின் உறவை எவ்வாறு பாதித்திருக்கிறது?

பதில்: எனது பார்வையில், மேற்காசிய நாடுகள் இந்தியாவின் மிக முக்கியப் பொருளாதாரச் சந்தைகளில் ஒன்றாகும். இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்தோர் நலன், வர்த்தகம், கடல் வழித்தடங்கள், பாதுகாப்பு, எரிசக்தி, உணவுப் பாதுகாப்பு ஆகியவற்றிற்கு அவை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றன.

மேற்காசிய பகுதிகளில் ஏராளமான இந்திய நிறுவனங்கள் செயல்பட்டுவரும் அதே வேளையில், வளைகுடா நாடுகள், குறிப்பாக சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் ஆகிய நாடுகள் இந்தியச் சந்தையில் தங்களது முதலீட்டை விரிவுப்படுத்தியுள்ளன.

உதாரணமாக, சமீபத்தில் சவுதி அரேபியா இந்திய நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவில் கிட்டத்தட்ட 2 ஆயிரம் கோடி டாலர் மதிப்பில் முதலீடு செய்துள்ளது. அதேபோல ஐக்கிய அரபு அமீரகம் இந்தியச் சந்தையில் 7 ஆயிரத்து 500 கோடி டாலர் அளவுக்கு முதலீடு செய்துள்ளது.

கரோனா நெருக்கடிக்கு மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் அங்கிருக்கும் சகாக்களுடன் போனில் தொடர்புகொண்டு, தேவையான மருத்துவ உதவிகளை அளிப்பதாக உறுதியளித்தனர்.

கரோனா ஊரடங்கால் கத்தார், பக்ரைன், ஓமன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் சிக்கித்தவித்த சுமார் 4 லட்சம் இந்தியர்களை வந்தே பாரத் திட்டத்தின் மூலம் இந்தியா மீட்டுவந்தது. இது அந்த நாடுகளின் ஒத்துழைப்பு இல்லாமல் சாத்தியமாகியிருக்க வாய்ப்பில்லை.

உலகாளவிய பிரச்னைகளுக்கு தீர்வு காண சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மானால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியும் கலந்துகொண்டு பேசியது கவனிக்கத்தக்கது. காணொலிக் காட்சி மூலமாகப் பேசிய அவர், பெருந்தொற்றுக்கு எதிராகப் போராட சர்வதேச ஒத்துழைப்பை வலியுறுத்தினார். சரிவைச் சந்தித்துள்ள உலகப் பொருளாதாரத்தை மீட்க இந்தியா உலக நாடுகளுடன் கைகோக்கும் என்றும் உறுதியளித்தார்.

கரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்து கண்டுபிடிக்க இந்தியா இஸ்ரேலுடன் கைகோத்துள்ளது. இதேபோல், மேற்காசிய நாடுகளுடானான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை நல்ல பயனளித்திருக்கிறது.

கேள்வி: சமீபத்தில், ”இந்தியா கடந்த 70 ஆண்டுகளில் பெற்ற அனைத்தையும் மதவெறியால் தற்போது இழந்துவருகிறது” என முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகரான கௌசிக் பாசு கூறியிருந்தார். இதனையும் மேற்காசிய இஸ்லாமிய நாடுகளுடனான இந்தியாவின் உறவையும் இணைத்துப் பார்க்க தோன்றுகிறது. தற்போது காஷ்மீர் சட்டப்பிரிவை நீக்கி ஒரு ஆண்டு ஆகியிருக்கிறது. இது அந்நாடுகளுடனான உறவில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியது?

பதில்: உலகளவில் இஸ்லாமியர்கள் அதிகளவில் வசிக்கும் நாடுகளில் இந்தியா இரண்டாமிடத்தில் இருக்கிறது. இஸ்லாம் அரபு நாடுகளைச் சென்றடைவதற்கு முன்னரே இந்தியாவிற்கு வந்துவிட்டது. இந்தியாவின் வளர்ச்சியில் இஸ்லாமியர்களின் பங்கு அளப்பரியது. அதனை மறுக்கவே முடியாது.

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகத் திகழ்வதால்தான், இஸ்லாமியர்கள் குடியரசுத் தலைவராக, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக, அறிவியல் ஆராய்ச்சியாளர்களாக இருந்துள்ளனர். பாலிவுட்டில் டாப் நடிகராகவும் திகழ்ந்துவருகின்றனர். ஏனெனில், முதலில் அவர்கள் இந்தியர்கள்.

இதுபோன்ற விஷயங்களைக் கூறிதான் இஸ்லாமிய நாடுகளுடன் நாம் நட்புறவை வளர்த்துக்கொள்ள வேண்டும். அதை விடுத்து ஒரு சிலர் பொறுப்பற்ற தன்மையோடு சமூக வலைதளங்களில் இஸ்லாமியர்களை எதிராக நிறுத்தி அறிக்கைகள் வெளியிடுகின்றனர். அவர்களைச் சட்டப்படி தண்டிக்க வேண்டும். ஏனெனில், இந்தியாவின் மீது மற்ற நாடுகள் வைத்திருக்கும் நல்லெண்ணத்தை நாம் இழக்க முடியாது.

காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் இறையாண்மை முடிவு என்பதை மேற்காசிய நாடுகளின் தலைவர்கள் புரிந்துகொண்டனர். ஆகவே, இந்தியாவுடனான அவர்களின் உறவில் எந்த விரிசலும் ஏற்படவில்லை.

கேள்வி: கரோனாவால் மற்ற நாடுகளைப் போல இந்தியா எந்த அளவிற்கு பாதிப்பைச் சந்தித்துள்ளது?

பதில்: கரோனா பெருந்தொற்று உலக நாடுகள் எதிர்பார்த்திராத ஒரு பேரிடராக மாறியிருக்கிறது. உலக நாடுகள் அனைத்தின் பொருளாதாரமும் மந்த நிலையில்தான் இருக்கிறது.

எண்ணெய் உற்பத்தி செய்யும் மேற்காசிய நாடுகளும் இந்தியாவும் அதற்கு விதிவிலக்கல்ல. உலகளவில் கச்சா எண்ணெய்யின் தேவை மற்றும் அதன் விலை குறைந்ததால் பெரும் பொருளாதார இழைப்பை மேற்காசிய நாடுகள் சந்தித்துள்ளன. வரலாற்றிலேயே முதல் முறையாக கச்சா எண்ணெய்யின் விலை பூஜ்யத்திற்கும் கீழ் சென்றது.

எண்ணெய் உற்பத்தி செய்யும் பெரும்பாலான நாடுகள் தங்கள் வரவு-செலவுத் திட்டங்களில் ஒரு பீப்பாய்க்கு 70 டாலர் என்று நிர்ணயித்துள்ளன. ஆனால், நடைமுறையில் உள்ள விலை அதற்கும் அடிமட்டத்தில் இருக்கிறது.

பெரும்பாலான உலக நாடுகள் பெரிய அளவிலான திட்டங்களைக் கைவிட்டன. அதுமட்டுமில்லாமல் பொதுவான செலவுகள் மற்றும் வளங்களை பெருந்தொற்றை எதிர்த்துப் போராடுவதற்காகத் திசை திருப்பின. விரைவில் வளைகுடா நாடுகளில் இயல்பு நிலை திரும்பிய பின், இந்தியர்களையே அவரகள் மீண்டும் வேலைக்காக நாடுவார்கள் என்று நான் நம்புகிறேன்.

ABOUT THE AUTHOR

...view details