தொலைக்காட்சிகள், பத்திரிக்கைகள், வார இதழ்கள், சமூக ஊடகங்கள் ஆகியவற்றில் அரசு குறித்து பொய்யான, தவறான, அவதூறு பரப்பும் செய்திகளை வெளியிட்டால் வழக்கு தொடரப்பட்டு கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஆந்திரா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அவ்வண்ணமே ஊடக நிறுவனங்கள் மீது வழக்குத் தொடர அரசுத் துறைகளின் செயலாளர்களுக்கு அதிகாரம் வழங்கிய உத்தரவு தொடர்பாக ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான மாநில அரசை ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சரும் தெலுங்கு தேசக் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு கடுமையாக விமர்சித்துள்ளார்.
செய்தி நிறுவனங்கள் பொய்யான தகவல்கள் வெளியிட்டால்...! - அதிரடிகாட்டும் ஜெகன்
இது குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா (பிசிஐ) தலைவர் நீதிபதி சந்திரமவுலி குமார் பிரசாத், “ஆந்திர அரசு, அரசின் செயலாளர்களுக்குச் செய்தி நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரங்கள் வழங்கியது மிகுந்த கவலை அளிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா அறிக்கையை மேற்கோள் காட்டி ட்வீட் செய்துள்ள சந்திரபாபு நாயுடு, “இந்த பிரச்சினையை அனைத்து தளங்களிலும் தொடர்ந்து எழுப்புவேன். அரசாங்கம் அதன் முடிவிலிருந்து பின்வாங்கும் வரை ஓயமாட்டேன்” என்று ட்வீட் செய்துள்ளார்.