பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 28-29 தேதிகளில் மேற்கொண்ட சவுதி அரேபியா பயணம் இருதரப்பு உறவில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. இதில், ஆற்றல், முதலீடு ஆகிய துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டது. சவுதி அரேபியாவில் வாழும் சுமார் 26 லட்சம் இந்தியர்கள் அந்நாட்டு வளர்ச்சியில் தொடர்ந்து பங்காற்றுவதற்கு இந்தப் பயணம் அடித்தளம் அமைத்துத் தந்துள்ளது. இது சவுதி அரேபிய பொருளாதாரத்தின் நீண்ட கால வளர்ச்சிக்கு வித்திடும். 2018ஆம் ஆண்டில் மட்டும், சவுதி வாழ் இந்தியர்களால் அந்நாடு சுமார் 11 பில்லியன் டாலர் லாபம் பெற்றது.
வல்லரசு நாடாக உருவெடுக்கும் இந்தியாவின் நோக்கத்தை வலுவூட்டும் விதமாக, வளைகுடா நாடுகளுடனான உறவுக்கு புத்துயிரூட்ட இந்தியா நடவடிக்கை மேற்கொண்டுவருவதையே பிரதமரின் பயணம் காட்டுகிறது. பிரதமர் நரேந்திர மோடி, சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தலைமையில் இருநாடுகளுக்கிடையே உருவாகியுள்ள 'திட்டமுறைக்கான கூட்டணி கவுன்சில்' (Strategic Partnership Council) இப்பயணத்தின் மிக முக்கிய ராஜதந்திர வெற்றியாக பார்க்கப்படுகிறது. இருநாடுகளுக்கு இடையேயான உயர்மட்ட அரசியல் கலந்தாலோசனைகளுக்கு, இது முக்கிய தளமாக அமையும். இருநாட்டின் வெளியுறவுத் துறை, வர்த்தகத் துறை அமைச்சகங்கள் இதனை வழிநடத்த உள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி, இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோரின் தனிப்பட்ட நெருக்கமே, இந்த வியூக ஒத்துழைப்பு உறவுக்கு காரணம். மோடி, முகமது பின் சல்மான் இடையேயான சந்திப்பை வெற்றிபெறவைக்க, முன்னதாக, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அங்கு பயணம் மேற்கொண்டிருந்தார். கடற்சார் பாதுகாப்பு, பயங்கரவாத ஒழிப்பு ஆகியவற்றில் இருநாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பை அதிகரிக்க இந்தப் பயணத்தின்போது முன்னுரிமை அளிக்கப்பட்டது.
வரும் 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் இந்தியாவும், சவுதியும் முதன்முறையாக கடல்சார் ராணுவ கூட்டுப் பயிற்சியில் ஈடுபடவுள்ளனர். இது இந்தியாவின் பெரும்பாலான ஆற்றல் இறக்குமதி நடைபெறும் மேற்கு இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதிபடுத்த உதவும். சவுதி அரேபியாவின் கனவு 2030 திட்டத்தின் படி, இந்தியா, சீனா, ஜப்பான், தென் கொரியா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளை தனது கூட்டுறவு சக்தியாக அந்நாடு இணைத்துக்கொண்டுள்ளது.
சவதி நிதியுதவியில் இயங்கும் UN Counter-Terrorism Centre (UNCTC) எனப்படும் ஐநா பயங்கரவாத ஒழிப்பு மையம் மூலம், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இதற்கு பல நாடுகளின் ஒத்துழைப்பைப் பெற இருநாட்டு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். 2012ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த மையம் தொடங்கத்திலிருந்தே, இந்தியா இதில் உறுப்பினராக இருந்து வருகிறது. அரேபிய அரசியல் பிரச்னைகளைப் பொறுத்தவரை, வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் மூலம் ஏமன் உள்ளநாட்டுப் போருக்கு தீர்வு காணவேண்டும், பாலஸ்தீனம் நாட்டை சுதந்திர நாடாக்கி ஜெருசலேத்தை அதன் தலைநகராக்க வேண்டும், ஐநாவின் 2,254 தீர்மானத்தின் படி சிரியா உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடாக உள்ளது.
உள்நாட்டுப் பிரச்னைகளுக்குள் வெளிநாடுகள் தலையிடக் கூடாது என பாகிஸ்தானை சூசகமாக விமர்சித்து, இருநாடுகளும் ஒன்றாக வெளியிட்ட கூட்டறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. சவுதி அரேபியாவில் 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் நரேந்திர மோடி ஒப்புக்கொண்டுள்ளார். 2022ஆம் ஜி20 மாநாட்டை இந்தியா நடத்தவுள்ளது. இரு நாடுகளின் நோக்கங்கள் ஒருமித்திருந்தால், பலதரப்பு உறவுகளை சீரமைக்க 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 75ஆவது ஆண்டு தொடக்க விழா உதவும். "ஐநா போன்ற ஒரு அமைப்பு நேர்மறையான மாற்றங்களைக் கொண்டு வரும் கருவியாக இருக்க வேண்டும்" என மோடி சொல்வது உண்மையாக வேண்டும்.
பிரதமர் நரேந்திர மோடியின் சவுதி பயணம் குறித்து ஐநாவுக்கான முன்னாள் இந்தியத் தூதர் அசோக் முகர்ஜி எழுதிய கட்டுரை.