தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 20, 2020, 10:20 AM IST

ETV Bharat / bharat

இஸ்லாமியர்களுக்கு அனுமதியில்லை - மருத்துவமனையில் சர்ச்சை விளம்பரம்

லக்னோ: கோவிட்-19 தொற்று இல்லை என்ற மருத்துவ சான்றிதழுடன் வரும் இஸ்லாமியர்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்படும் என்று உத்தரப் பிரதேசத்திலுள்ள மருத்துவமனை ஒன்று சர்ச்சை விளம்பரம் வெளியிட்டுள்ளது.

UP hospital ad on Corona
UP hospital ad on Corona

நாடு முழுவதும் கோவிட்-19 தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மருத்துவர்கள், சுகாதாரத் துறை பணியாளர்கள் பெரும் முயற்சி எடுத்துவருகின்றன.

இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் மீருட் நகரிலுள்ள வாலண்டிஸ் புற்றுநோய் மருத்துவமனை சர்ச்சைக்குரிய விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

டெல்லி நிஜாமுதீனில் நடைபெற்ற சமய மாநாடு காரணமாகத்தான் நாட்டில் வைரஸ் தொற்று அதிகரித்துள்ளதாக அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, மருத்துவமனைக்கு வரும் இஸ்லாமியர்கள் தங்களுக்கு கோவிட்-19 தொற்று இல்லை என்பதை உறுதி செய்யும் விதமாக மருத்துவ பரிசோதனை சான்றிதழையும் எடுத்துவர வேண்டும் என்றும் அப்படி சான்றிதழை எடுத்துவரத் தவறும் இஸ்லாமியர்களுக்கு மருத்துவமனையில் அனுமதியில்லை என்றும் அந்த மருத்துவமனை விளம்பரம் வெளியிட்டது.

கோவிட்-19 தொற்று என்பது சாதி, மத, இன, மொழி வேறுபாடுகளின்றி அனைவருக்கும் பரவிவரும் இச்சூழலில் ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டும் குறிப்பிட்டு மருத்துவமனை வெளியிட்டுள்ள இந்த விளம்பரம் பொறுப்பற்ற முறையில் இருப்பதாகப் பலரும் விமர்சித்துள்ளனர்.

இது குறித்து மருத்துவமனை மேலாளர் அமித் ஜெயின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது முற்றிலும் தவறான ஒரு செயல் என்றும் இது குறித்து விளக்கமளிக்க மருத்துவமனை நிர்வாகத்திற்குக் கடிதம் எழுதியுள்ளதாகவும் மீருட் முதன்மை மருத்துவ அலுவலர் ராஜ் குமார் தெரிவித்தார்.

அதேசமயம், எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தினரையும் புண்படுத்தும் நோக்கில் விளம்பரம் வெளியிடப்படவில்லை என்றும் கோவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்த அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் முன்வந்து போராட வேண்டும் என்றும் மற்றொரு விளம்பரத்தை ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டது.

இதையும் படிங்க: கணவருக்கு வீடியோ காலில் இறுதி அஞ்சலி செலுத்திய பெண்

ABOUT THE AUTHOR

...view details