மக்களவை பட்ஜெட் விவாதத்தின்போது, தற்போது நாட்டின் பொருளாதார மந்த நிலை சீரடைந்துவருவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திருப்தி தெரிவித்துள்ளார். ஆனால், இரு மாதங்களுக்கு முன், இதே நிதியமைச்சர் கண்ணை மூடிக் கொண்டு நாட்டில் பொருளாதார மந்த நிலை இல்லை என்று கூறியிருந்தார்.
நிதி நிலை குறித்த ஆய்வில் செய்யப்பட்ட மதிப்பீடுகளை போலலே பலன் கிடைப்பதற்கான நல்ல அறிகுறிகள் தெரிவதாக அவர் இப்போது கருதுகிறார், நேரடி வெளிநாட்டு நிதி முதலீடு உள்பட. சி.ஏ.ஜி. ரிசர்வ் வங்கி , உலக வங்கி உள்பட பல முக்கிய அமைப்புகள் கடந்த சில காலமாகவே பொருளாதார வளர்ச்சி குறைவாக இருப்பதாக கூறிவருகின்றன.
வாகன உற்பத்தி, எரிசக்தி, இயற்கை எரிவாயு, வேளாண்மை, கட்டுமானத் துறையில் பரவலாகவே முடக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்த எச்சரிக்கை மணிக்கு மத்திய அரசு செவி சாய்த்திருந்தால், சரியாக நடவடிக்கைகளை எடுக்க முன்னுரிமை கொடுக்கப்பட்டிருந்தால் பலனை அடைந்திருக்கலாம். இதுதான் நிதி சார்ந்த நிர்வாகத்தின் தனித் திறமை ஆகும்.
நிதியமைச்சர் அளித்த புள்ளி விவரத்தின்படி, 2019ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரை சுமார் ஒரு பில்லியன் டாலர்கள்( ரூ.7,133 crores) கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நேரடி வெளிநாட்டு முதலீடாக கிடைத்தது. 2019ஆம் ஆண்டில் வெளிநாட்டு முதலீடுகளை அதிகம் ஈர்க்கும் முதல் 10 நாடுகளின் பட்டியலை ஐ.நா. அமைப்பு வெளியிட்டுள்ளது. அமெரிக்கா, சீனா, சிங்கப்பூர் நாடுகள் முதல் மூன்று இடங்களில் உள்ளன. பிரேசில், இங்கிலாந்து, ஹாங்காங், பிரான்ஸ் அடுத்தடுத்த இடங்களை பிடிக்கின்றன. இந்தியா 8ஆவது இடத்தில் உள்ளது. வெளிநாட்டு முதலீட்டில் அமெரிக்கா பெற்றதில் ஐந்தில் ஒரு பங்குதான் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.
சீனா இந்தியாவைவிட மூன்று மடங்கு அதிக வெளிநாட்டு முதலீடுகளை பெற்றுள்ளது. இந்தத் தருணத்தில் மத்திய நிதியமைச்சகம் தன்னிலை மறந்து குழப்பமான சூழலில் உள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவுக்கு கிடைத்த வெளிநாட்டு முதலீடு குறித்த புள்ளி விவரங்களை ஆராய்ந்தால், 2016ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் மாதத்துக்குள் அதிகமான வெளிநாடு முதலீடு குவிந்துள்ளது. அத்தகையை நிலையை மீண்டும் எட்ட முடியாததால், மத்திய அரசு சில வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க ஆறு மாதங்களுக்கு முன் சில திருத்தங்களை அறிவித்தது. நிலக்கரி சுரங்கத்துறை, ஒப்பந்த துறை உற்பத்தி மற்றும் ஒற்றை பிராண்ட் சில்லறை விற்பனை நிறுவனங்களுக்கு சில சலுகைகள் அறிவிக்கப்பட்டன.
இவை நல்ல பலன்களை தரும் என்ற எதிர்பார்ப்பு நிறைந்திருக்கிறது. பாதுகாப்புத் துறை மற்றும் விண்வெளித் துறையிலும் வெளிநாட்டு முதலீடு கிடைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன . கடந்த 5 ஆண்டுகளில் இந்தத் துறைகளில் ரூ. 1,800 கோடி மட்டுமே வெளிநாட்டு முதலீடாக கிடைத்துள்ளது. இந்த விஷயத்தில் ஏன் இலக்கை அடைய முடியவில்லை. முன்னேற்றம் ஏன் கிடைக்கவில்லை என்று சுய பரிசோதனை செய்துகொண்டு, நாட்டின் நீண்ட கால திட்டங்களில் அரசு தீர்க்கமான நல்ல முடிவுகளை எடுக்க வேண்டும். வங்கதேசத்தில் 2018ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2019ஆம் ஆண்டு வெளிநாட்டு முதலீடு குறைந்துள்ளது.
பாகிஸ்தானில் 20 விழுக்காடு வெளிநாட்டு முதலீடு குறைந்திருக்கிறது. தெற்காசிய நாடுகளில் வெளிநாட்டு முதலீடுகளின் புள்ளி விவரங்களை ஆராய்ந்தால், இந்தியாவில் அதிகரித்தே உள்ளது. ரூ. 5 லட்சம் கோடி பொருளாதாரத்தை எட்ட வேண்டுமென்றால், நாட்டில் 8 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி இருந்தால் மட்டுமே சாத்தியமாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. உலகில் அதிக வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் முதல் மூன்று நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவாக வேண்டும். அதற்கான வியூகங்களை வகுக்க வேண்டும். திறமையற்ற நிர்வாகம், தொழிலாளர்கள் துறை, சுகாதாரத்துறை போன்றவற்றில் இந்தியா பின்தங்கியிருப்பதாக உலக பொருளாதார கூட்டமைப்பு(WEF)தெரிவித்துள்ளது. இந்த குறைகளை களைய உடனடி நடவடிக்கை தேவை அவசியமாகிறது.
நான்கு மாதங்களுக்கு முன் நியூயார்க் புளும்பெர்க் வர்த்தக மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியா வெளிநாட்டு முதலீட்டுக்கு உகந்த நாடு என்றும் இந்தியாவில் அற்புதமான வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன என்றும் முழங்கினார். இந்தியாவில் நிதி முதலீட்டுக்கு உள்ள வாய்ப்புகளையும் நிதி முதலீட்டுக்குள்ள சாதகமாக அம்சங்கள் குறித்து பேசினார். ஆனால், நிர்வாக தரப்பில் காட்டப்படும் சுணக்கமே பல்வேறு பிரச்னைகளுக்கு காரணமாக உள்ளது.
இந்திய அரசு பல துறைகளில் உள்ள குறைபாடுகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சர்வதேச நிதியகம் ஏற்கனவே தெரிவித்துள்ளது. உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவில்லெயனில் இந்தியா International Competitive Index பட்டியலில் 30 இடங்கள் வரை பின்தங்க வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. சாதகமான வர்த்தக சூழல் ஏற்பட்டால், இந்தியா 63ஆவது இடம் வரை முன்னேற வாய்ப்புள்ளது. ஆனால்,ஏனோ இந்தியா பின்தங்கியே இருக்கிறது.
நியூசிலாந்தில் ஒரு சொத்தை ஒரு மணி நேரத்தில் பதிவு செய்துவிட முடியும். அரை நாளுக்குள் எந்தவிதமான வர்த்தக நிறுவனத்தையும் தொடங்கிவிட முடியும். ஆனால், இங்கே ஒரு சொத்தை பதிவு செய்ய 154 நாள்களும் வணிக நிறுவனத்தை தொடங்க 136 நாள்களும் காத்திருக்க வேண்டும். போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலில் லஞ்ச லாவண்யங்கள், மின்சாரத்துறை, போக்குவரத்துத் துறைகளில் இந்தியாவில் பிரச்னைகள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
இத்தகைய குறைகளை களைய அடிப்படையிலிருந்து நாம் திட்டமிடவில்லை. 2024/25ஆம் ஆண்டுக்குள் ரூ. 100 லட்சம் கோடி நிதி திரட்டும் முயற்சிக்கு இன்னும் நாம் ஒரு அடி கூட எடுத்து வைக்கவில்லை. போக்குவரத்து உள்ளிட்ட விஷயங்களில் உடனடியாக அனுமதி அளித்து வெளிநாட்டு முதலீடுகளை திரட்டுவதில் சிங்கப்பூரும் ஹாங்காங்கும் கடுமையாக போட்டி போடுகின்றன. அரசு அலுவலர்களின் மோசமான செயல்பாடுகளால் இந்தியா தவித்துவருகிறது. இத்தகைய தடைகளை களைய மத்திய, மாநில அரசுகள் தகுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டால், இந்தியாவிலும் வெளிநாட்டு முதலீடு தாராளமாக குவியும்.
இதையும் படிங்க:'2020 பட்ஜெட் விவேகமானது' - பொருளாதார நிபுணர் குருசரண் தாஸ் கருத்து