காவல்துறையினர் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை சிதைக்க சில காவலர்கள் உதாரணமாகிவிடுகின்றனர். இந்தியா முழுவதும் காவல்துறையினர் அரங்கேற்றிய கொடூர சம்பவங்கள் இன்றும் நம் மனத்தில் ஆறாத வடுக்களாய் எஞ்சி நிற்பவை.
திருச்சி கர்ப்பிணி மரணம்
திருச்சியில் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியினரை காவல்துறை ஆய்வாளர் காமராஜ் என்பவர் எட்டி உதைத்ததில் உஷா என்ற கர்ப்பிணி பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சம்பந்தப்பட்ட காவலர் மீது நடவடிக்கை எடுக்கச்சொல்லி அமைதியான முறையில் போராடிய மக்களும் தாக்கப்பட்டனர்.
டாஸ்மாக்குக்கு எதிரான போராட்டம்
திருப்பூர், சோமனூர் அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி போராடிய பெண்களை காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் சரமாரியாக கன்னத்தில் அறைந்தார். இதில் ஈஸ்வரி என்ற பெண் கடுமையாகப் பாதிக்கப்பட்டார். உரிமைக்காகப் போராடிய மக்களை தாக்கிய பாண்டியராஜன் பின்னாளில் எஸ்.பியாக பதவி உயர்வுபெற்றார். பொள்ளாச்சி பாலியல் வன்புணர்வு வழக்கு இவரிடம் ஒப்படைக்கப்பட்டதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
இம்பால் என்கவுன்டர்
சஞ்சித் மீத்தி எனும் 27 வயது இளைஞனை மணிப்பூர் காவலர்கள் போலி என்கவுன்டர் செய்தனர். இதில் கர்ப்பிணிப் பெண் ஒருவரும் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட 9 காவல்துறை அலுவர்களில் ஹெரோஜித் சிங் என்பவர், தான் போலி என்கவுன்டர் செய்ததை ஒப்புக்கொண்டார்.
மேலிடத்தின் உத்தரவு காரணமாக சஞ்சித்தை சுட்டேன். எந்தவித குற்றவுணர்ச்சியுமின்றி இதை செய்தேன் என ஹெரோஜித் சிங் கூறினார்.
குழந்தை முன்னிலையில் தந்தையை கொடூரமாக தாக்கிய காவலர்கள்
சித்தார்த் நகர் மாவட்டத்தில் குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை காவல்துறையினர் தாக்கிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ரிங்கு பாண்டே என்ற அந்த நபரைத் தாக்கியது காவல்துறை துணை ஆய்வாளர் வீரேந்திர மிஸ்ரா மற்றும் தலைமைக் காவலர் மகேந்திர பிரசாத் என்பது தெரியவந்துள்ளது. அவர்களை உ.பி., காவல்துறையினர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர்.
குழந்தைகள் முன்பு வன்முறையாக நடந்துகொள்வது அவர்களுக்கு உளவியல் சிக்கலை ஏற்படுத்தக்கூடும். காவல்துறையினர் என்றாலே மோசமானவர்கள் என்ற எண்ணத்தை மனதில் விதைத்துவிடும். காவல்துறை உங்கள் நண்பன் என்பது வெறும் வசனமாக இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்குமென மனித உரிமை ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.