கரோனா வைரஸ் நோய் இந்தியாவில் வேகமாக பரவிவருகிறது. கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காத மருத்துவமனைகளில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக புதிய வழிகாட்டுதல்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, நோய் பரவலை பொறுத்து மருத்துவமனை நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. பதிவு மையம், மருத்துவர்களின் அறை, மருந்தகம், அவசர பிரவு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வார்டு, சமையலறை, வாகனம் நிறுத்துமிடம் ஆகியவை மிக குறைந்த அபாயம் உள்ள பகுதியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
ரத்த வங்கி, பரிசோதனை மையம் ஆகியவை குறைந்த அபாயம் உள்ள பகுதியாகவும் சுவாச கோளாறு பிரச்னைகளுக்கான மாதிரிகளை சேகரிக்கும் ஆய்வகத்தை மிதமான அபாயம் உள்ள பகுதியாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகச்சை அளிக்கும் பகுதியை அதிக அபாயம் உள்ள பகுதியாக சுகாதாரத் துறை அமைச்சகம் பிரித்துள்ளது.