உலகின் பெரிய அண்ணனாகப் பார்க்கப்படும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், 2 நாள் பயணமாக இன்று இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார். ட்ரம்ப்பை வரவேற்பதற்கான ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பயணத்தின் மூலம் இந்தியா - அமெரிக்கா இடையிலான நட்புறவு மேலும் வலுப்படும் என நம்பலாம். அமெரிக்க அதிபரின் இந்த பயணத்தின்போது வர்த்தகம், பாதுகாப்பு, விண்வெளி போன்ற துறைகளில் இரு நாடுகளிடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அமெரிக்க அதிபரின் இந்த இந்தியப் பயணம் குறித்து பல்வேறு விவாதங்கள் நாடு முழுவதும் இப்போது நடைபெற்று வருகின்றன.
இதில், அனைவரின் கவனமும் இரு நாடுகள் இடையிலான வர்த்தகம் தொடர்பான ஒப்பந்தம் எவ்வாறு இருக்கும் என்பதாகத்தான் உள்ளது. அமெரிக்க அதிபரின் இந்த பயணத்தின்போது இந்தியா - அமெரிக்கா இடையிலான முக்கியமான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என்று யூகிக்கப்படுகிறது. தனது பயணத்தின்போது பேச்சுவார்த்தை சுமுகமானால், வர்த்தக உடன்பாடு கையெழுத்தாவது சாத்தியம் என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இரு நாடுகளிடையேயான பேச்சுவார்த்தைகளும் இப்போதே விரிவான அளவில் நடைபெற்றும் வருகின்றன. இதில் எஃகு, அலுமினியம் பொருட்களுக்கான உயர்ந்த பட்ச விலை நிர்ணயிக்கப்பட்டதற்கு விலக்கு அளிக்க வேண்டும். அதற்காக பொதுவான திட்டத்தை உருவாக்கி கட்டண முறையை சீரமைக்க வேண்டும் என்பதை இந்தியா வலியுறுத்தி வருகிறது.
அதே போல், விவசாயம், வாகனம், பொறியியல் துறை சார்ந்த தயாரிப்புப் பொருட்களுக்குச் சந்தையில் கூடுதல் பங்கு வழங்க வேண்டும் என இந்தியா பிடிவாதமாக உள்ளது. அதே வேளையில் அமெரிக்காவோ, தகவல் மற்றும் தொடர்பு தொழில் நுட்பத்துறை (ICT) பொருட்களுக்கான இறக்குமதி செலவைக் குறைக்க, பால் பொருட்கள், மருத்துவச் சாதனங்களை அதிகம் சந்தைப்படுத்த அமெரிக்கா கெடுபிடி காட்டுகிறது.
சமீபத்தில் கூட, இந்தியாவுக்கு ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுதங்கள் விற்பனை செய்யும் முடிவுக்கு அமெரிக்க பாதுகாப்புத்துறை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்படி, அமெரிக்க அதிபரின் வருகையின் போது 186 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனத் தெரிகிறது. மேலும் அமெரிக்காவின் லோக்ஹீத் மார்டின் நிறுவனம் மூலம் 24 பன்திறன் படைத்த எம்.எச்.60 ரோமியோ சீஹாக் ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கான ஒப்பந்தமும் இறுதி செய்யப்படும் என்றும் தெரிகிறது.