தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மருத்துவ படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கு இட ஒதுக்கீடு: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு

மருத்துவப் படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை அமல்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.

Apex Court
Apex Court

By

Published : Jun 3, 2020, 5:23 PM IST

இளங்கலை, முதுகலை மருத்துவப் படிப்புகளில் பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கு 27 விழுக்காடு தேசிய அளவிலான இட ஒதுக்கீட்டை அரசு கல்லூரிகளில் அமல்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

தாக்கல் செய்த மனுவில், "மத்திய அரசு பணிகளில் 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு இந்திய அரசு வழங்கியது. பின்னர், உச்ச நீதிமன்றம் அதனை உறுதிசெய்தது.ஆனால், 2017-18, 2018-19, 2019-20 ஆகிய கல்வியாண்டுகளில் இந்த இட ஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை. 2018-19 கல்வியாண்டில், மொத்தமுள்ள 7,982 இடங்களில் 2,152 பேருக்கு இட ஒதுக்கீடு வழங்கியிருக்க வேண்டும். ஆனால், பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 220 பேர் மட்டுமே மருத்துவப் படிப்பில் சேர்ந்தனர்.

அதேபோல், இளங்கலை மருத்துவப் படிப்பில் தேசிய அளவிலான இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 66 பேர் மட்டுமே மருத்துவப் படிப்பில் சேர்ந்தனர். இளங்களை மருத்துவப் படிப்பை பொறுத்தவரை தேசிய அளவில் 4,061 இடங்கள் உள்ளன. 27 விழுக்காடு என்றால் 1,096 பேருக்கு இடங்கள் ஒதுக்கியிருக்க வேண்டும். இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படுகிறதா என்பதை மத்திய அரசு உறுதிசெய்ய வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளாக தேசிய அளவிலான இட ஒதுக்கீட்டைச் சரியாக அமல்படுத்த வேண்டும் எனப் பிற்படுத்தப்பட்ட மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான இடங்களில் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக திமுக செய்தித் தொடர்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.கே.எஸ். இளங்கோவன், மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்குத் தொடர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இதுவரை 41 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கரோனா பரிசோதனை - ஐசிஎம்ஆர்

ABOUT THE AUTHOR

...view details