2014ஆம் ஆண்டு ஆந்திரப்பிரதேசத்தில் இருந்து, தெலங்கானா என்ற புதிய மாநிலம் பிரிக்கப்பட்டது. அதற்கிடையே நடைபெற்ற 16ஆவது மக்களவைத் தேர்தலில் புதிய இந்தியாவை உருவாக்க, ஊழல் இல்லா நல்லாட்சி மலர தாமரை சின்னத்துக்கு வாக்களியுங்கள் என, வெள்ளை நிற தாடியுடன் இந்தியாவின் ட்ரெண்ட் செட்டராக பாஜக சார்பில் களமிறங்கினார் நரேந்திர மோடி. இத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தெலுங்கு தேசம் கட்சியும் இடம்பெற்றிருந்தது.
இந்தத் தேர்தலுடன் தெலங்கானா, ஆந்திரப்பிரதேசம் ஆகிய இரு மாநில சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் ஆந்திரா மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை பெற்றுத் தருவோம் என்ற வாக்குறுதியுடன் களம் கண்டது சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி.
தொடர்ந்து பத்து ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியால் அதிருப்தி அடைந்த மக்கள் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு உற்சாகத்துடன் வாக்களித்தனர். இந்தத் தேர்தலில் மக்களவையில் எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை பெற, பிடிக்க வேண்டிய 55 இடங்களில் கூட காங்கிரஸ் வெற்றி பெறவில்லை. வெறும் 44 தொகுதிகளை கைப்பற்றி படுதோல்வி அடைந்தது காங்கிரஸ்.
ஆந்திரா மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து பெறுவது உள்ளிட்ட விவகாரங்களில் பாஜகவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து 2018ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் விலகினார் சந்திரபாபு நாயுடு.
இதையடுத்து, பாஜக அல்லாத கட்சியை மத்தியில் ஆட்சி அமைக்க அமர்த்தும் முயற்சியில் ஈடுபட தொடங்கினார் சந்திரபாபு நாயுடு. 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தெலங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரசுன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். இத்தேர்ததில் படுதோல்வியை சந்தித்தது காங்கிரஸ் - தெலுங்கு தேசம் கட்சிகளின் கூட்டணி.