இந்தியாவில் கரோனா வைரஸ் பரவலுக்கு வழிவகுத்ததாகக் கூறப்படும் டெல்லி சமய மாநாட்டில் பங்கேற்ற 2500க்கும் மேற்பட்ட வெளிநாட்டினரின் பெயர்களை மத்திய அரசு கருப்புப்பட்டியலில் சேர்த்ததோடு, அவர்களின் விசாவையும் ரத்து செய்து அறிவித்தது. இதனால் இந்தோனேஷியா, இலங்கை, ஜோர்டான், ஃபிஜி, சீனா, சூடான், டான்சானியா, மியான்மர், நேபாள் ஆகிய நாடுகளிலிருந்து வந்த வெளிநாட்டினர் பலரும் இந்தியாவிலேயே முடக்கப்பட்டுள்ளனர்.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், '' 40 நாடுகளைச் சேர்ந்த 2500க்கும் மேற்பட்டோரின் பெயர்களை மத்திய அரசு கருப்புப்பட்டியலில் சேர்த்துள்ளது. எங்களை தற்காத்துக்கொள்ள எந்தவொரு வாய்ப்பையும் அரசு வழங்காமல், இந்திய அரசியலமைப்பின் 21ஆவது சட்டத்தினை முழுவதுமாக மீறியுள்ளது.
மத்திய அரசின் நடவடிக்கை மூலம் வெளிநாட்டினர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, மாநில அலுவலர்களால் எங்களின் கடவுச்சீட்டு முடக்கப்பட்டுள்ளது. இதனால் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள எங்களின் தனிப்பட்ட சுதந்திரத்தை முழுவதுமாக இழந்துள்ளோம். அதனால் கருப்புப்பட்டியலில் இருந்து எங்களின் பெயர்களை நீக்குவதோடு, எங்கள் நாடுகளுக்கு திரும்பி செல்ல அனுமதிக்க வேண்டும்'' என தெரிவித்தனர்.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம். கன்வில்கர், தினேஷ் மகேஸ்வரி, சஞ்சீவ் கண்ணா ஆகிரோரின் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள், வரும் வெள்ளிக்கிழமைக்குள் மத்திய மற்றும் மாநில அரசுகள் தங்களது பதிலை அளிக்க வேண்டும் எனக் கூறி வழக்கின் விசாரணையை திங்கள்கிழமைக்கு ஒத்தி வைத்தனர்.
இதையும் படிங்க:சாத்தான்குளம் சம்பவம்: சிசிடிவி காட்சியை சமர்ப்பிக்க உத்தரவு!