தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 23, 2020, 4:51 PM IST

ETV Bharat / bharat

உ.பி., துணை ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் பூதாகரமாகிறது!

லக்னோ : தாடி வைத்திருந்த காரணத்திற்காக காவல் உதவி ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்த உத்தரப் பிரதேச அரசுக்கு மத அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

உ.பி., துணை ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம் பூதாகரமாகிறது!
உ.பி., துணை ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம் பூதாகரமாகிறது!

உத்தரப் பிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றிவருபவர் இன்டெசர் அலி. அவர் தனது மத நம்பிக்கையின் அடிப்படையில் தாடியை வைத்திருந்ததாகத் தெரிகிறது. அதை காரணம்காட்டி, காவல்துறை மேலிடம் அவரை பணியிடை நீக்கம் செய்து, அவர் மீது ஒழுங்க நடவடிக்கை மேற்கொண்டது.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில், "காவல் துறையில் பணியாற்றும் எந்தவொரு நபரும் தாடியை வைத்திருக்க விரும்பினால், அதற்கு உரிய அனுமதியை பெற வேண்டும். உதவி ஆய்வாளர் இன்டெசர் அலியிடம் அவரது தலைமை ஆய்வாளர் பலமுறை இதற்கு அனுமதி பெற வேண்டுமென கூறியுள்ளார்.

இருப்பினும், அவர் அதற்கு இணங்கவில்லை. தாடியை அனுமதியின்றி வைத்திருந்தார். இதன் காரணமாகவே அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு வேறு எந்தக் காரணமும் இல்லை. காவல் துறையினரின் துறைசார்ந்த வழிகாட்டுதல்களின்படி, சீக்கியர்கள் மட்டுமே தாடியை வைத்திருக்க அனுமதிக்கப்படுகிறார்கள். மற்ற அனைத்து காவலர்களும் சுத்தமாக தாடியை மழித்திருக்க வேண்டும்" என்றனர்.

அதற்கு பதிலளித்த பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள உதவி ஆய்வாளர் அலி, "மத நம்பிக்கையின் அடிப்படையில் தாடியை வைத்திருக்க அனுமதி கோரி மீரட் டி.ஐ.ஜி அலுவலகத்திற்கு நான் எழுதிய கடிதத்திற்கு இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை" என தெரிவித்தார்.

இந்த விவகாரம் அம்மாநிலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அரசியல் கட்சிகள், மனித உரிமை ஆர்வலர்கள், மத அமைப்பினர் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், அலி இடைநீக்கம் செய்யப்பட்டதை இஸ்லாமிய மத தலைவர் உலாமா மௌலானா லுட்ஃபுர் ரஹ்மான் சாதிக் கசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக ஊடகங்களிடையே பேசிய அவர், "சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு தலைப்பாகை மற்றும் தாடியை வைத்திருக்க சுதந்திரம் இருப்பதைப் போலவே, இஸ்லாமிய மார்க்கத்தைச் சேர்ந்தவர்களும் மத நம்பிக்கையின் படி தாடியை வைக்கும் அடிப்படை உரிமை உண்டு. தாடி மற்றும் தலைப்பாகையை வைத்து சீக்கியர் தங்கள் மதத்தை பின்பற்றுவது போல, இஸ்லாத்திலும் இதேபோல் தாடியை வைத்திருப்பது அவசியம். அதனை அரசு புரிந்துகொள்ள வேண்டும்.

உடனடியாக, துணை ஆய்வாளர் அலிக்கு வழங்கப்பட்ட பணியிடை நீக்க ஆணையை திரும்பப்பெற வேண்டும். அத்துடன், இத்தகைய வெறுப்பிணர்வைத் தூண்டிய அந்த உயர் அலுவலரை இடைநீக்கம் செய்ய வேண்டுமென முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை வலியுறுத்திகிறோம்" என்று கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details